Sunday, November 13, 2011

தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் வாழ்க்கை வரலாறு


மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களின்
வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்(1855-1942)
 
இந்த நூற்றாண்டில் தமிழ் இலக்கிய உலகில் இரண்டு பெரிய மலைகளைப் போன்ற பெரியவர்கள் தமிழ் மொழிக்குப் புதிய ஒளியைக் கொடுத்தார்கள். ஒருவர் ஸ்ரீசுப்பிரமணிய பாரதியார். மற்றொருவர் ஸ்ரீ மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள். கவிஞர் பாரதியார் தம்முடைய புதிய கவிகளால் தமிழ்த்தாய்க்குப் புதிய அணிகளைப் பூட்டினார். ஐயர் அவர்களோ, பல காலமாக மங்கி மறைந்து கிடந்த பழைய அணிகளை மீட்டும் எடுத்துக்கொணர்ந்து துலக்கி மெருகூட்டிப் பூட்டி அழகு பார்த்தார்கள்.
"தமிழ்த் தாத்தா" என்று தமிழ்க் குழந்தைகளால் அன்புடன் போற்றப் பெறும் ஐயர் அவர்கள் உண்மையில் சென்ற நூற்றாண்டிலேயே தம்முடைய அரும்பெருந் தொண்டைத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் 1855-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி தோன்றினார்கள். அவர்கள் தோன்றிய காலத்தில் இருந்த தமிழின் நிலைக்கும் அவர்கள் மறைந்த காலத்தில் (ஏப்ரல், 1942) தமிழ் உயர்ந்து நின்ற நிலைக்கும் எவ்வளவோ வேற்றுமை உண்டு. அவர்கள் 1887-ஆம் ஆண்டில் சீவகசிந்தாமணியை அச்சிட்டு வெளியிட்டார்கள். அது முதல் இறுதிக் காலம்வரையில் தமிழ்த் தாயின் அணிகளை ஒவ்வொன்றாகப் புதுப்பிக்கும் அற்புதமான தொண்டில் தம் காலம் முழுவதையும் அவர்கள் செலவிட்டார்கள்.

அவர்கள் தோன்றிய காலத்தில் பெரும் புலவர்களும் சங்க நூல்கள் என்று பெயரளவிலே தெரிந்துகொண்டிருந்தார்களே ஒழிய அவை இன்னவை என்பது அவர்களுக்குத் தெரியாது. கோவலன் கதை என்ற ஒரு நாடோடிக் கதையையும் அதில் வரும் கண்ணகியையும், மாதவியையும் அறிவார்களேயன்றிச் சிலப்பதிகாரத்தையும் அதில் உள்ள பாத்திரங்களையும் அறியமாட்டார்கள். அகநானூறு, புறநானூறு என்ற இரண்டுக்கும் உள்ள வேறுபாடு இன்னதென்று தெரியாது. மணிமேகலை எந்தச் சமயத்தைப் பற்றிய நூல் என்பதும் தெரியாது.

இன்றோ பள்ளிக்கூடத்திற் பயிலும் மூன்றாம் வகுப்பு மாணவனுக்குப் பாரியைப்பற்றிய வரலாறு தெரியும். சேரன் செங்குட்டுவனுடைய வெற்றியைப்பற்றி மேல் வகுப்பு மாணாக்கர்கள் படிக்கிறார்கள். பள்ளிக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் புறநானூறு, குறுந்தொகை பத்துப் பாட்டு முதலிய சங்க நூல்களிலுள்ள பகுதிகளைப் பாடமாக வாசிக்கிறார்கள் பிள்ளைகள்.

பல ஆண்டுகளுக்கு முன் திராவிட மொழிகளின் அமைப்பைப்பற்றிக் கால்டுவெல் என்ற ஆங்கிலேயர் அழகான நூல் ஒன்று எழுதினார். 'திராவிட மொழிகளின் ஒப்பியல்' (Comparaitive Philology of Dravidian Languages) என்பது அந்த நூலின் பெயர். அதை இன்றும் சிறந்த நூலாகப் புலவர்கள் கொண்டாடுகிறார்கள். அதை எழுதினவருக்கே எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை கிடைக்கவில்லை. அந்நூல்களின் அமைப்பை அவர் அறியார்.
இன்றோ சங்ககாலத் தமிழரைப் பற்றியும், நூல்களைப் பற்றியும் பல பல நூல்கள் வந்திருக்கின்றன. பல வகையான ஆராய்ச்சிகள் நிகழ்ந்துவருகின்றன. தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்று சங்க காலத்தைப் போற்றிப் பாராட்டிப் பெருமிதத்துடன் பேசுகிறோம். தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம், தமிழர் மரபு என்று நமக்குரிய தனிச் சிறப்பைப் பல மேடைகளில் புலவர் பெருமக்கள் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். பாரதநாட்டில் உயிருடன் வழங்கிவரும் மொழிகள் யாவற்றிலும் பழையது. இலக்கிய வளம் பொருந்தியது. இலக்கண வரம்புடையது, எதையும் வழங்கத்தக்க சொல்வளமுடையது என்றெல்லாம் மற்றவர்களும் ஒப்புக்கொள்ளும் நிலை தமிழுக்குக் கிடைத்திருக்கிறது.
தமிழ்த் தாத்தாவின் அரும்பெருந் தொண்டே இத்தனை உயர்வுக்கும் மூலகாரணம் என்பதைத் தமிழ்ப் புலவர்கள் அறிவார்கள். தமிழ் வரலாற்றில் ஐயர் அவர்களுக்கு என்று ஒரு தனிப் பகுதி இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 

ஐயர் அவர்களுடைய ஊர் தஞ்சை ஜில்லாவில் உள்ள உத்தமதானபுரம் என்ற சிறிய கிராமம். சங்கீத வித்துவானாகிய ஸ்ரீ வேங்கட சுப்பையருக்கும் ஸ்ரீமதி சரசுவதியம்மாளுக்கும் புத்திரராக ஐயர் அவர்கள் பிறந்தார்கள். அவர்களுடைய தந்தையார் பல இடங்களுக்குச் சென்று தம்முடைய இசைத் திறமையைக் காட்டி ஊதியம் பெற்று வாழ்ந்து வந்தார்கள். குறிப்பிட்ட வேலையும் குறிப்பிட்ட சம்பளமும் இல்லாவிட்டாலும் அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் அன்பும் கலையபிமானமும் அவரைப் போன்ற கலைஞர்களைப் பாதுகாத்து வந்தன. அங்கங்கே இருந்த செல்வர்களும் ஜமீன்தார்களும் அவருக்குச் சிறப்புச் செய்து, வாழ்க்கையைச் சுவையுடையதாக்கினார்கள். இந்தச் சூழ்நிலையில் ஐயர் அவர்கள் வளர்ந்துவந்தார்கள். தந்தையாரிடமும் சில திண்ணைப் பள்ளிக்கூடத்து ஆசிரியர்களிடமும் இப்பேரறிஞர் இளமையில் கல்விபயின்றார்கள். அக்காலத்தில் சில நூல்களையே கற்றிருந்தாலும், அவற்றைத் திருத்தமாகப் பயின்று மற்றவர்களுக்கும் தெளிவாகப் பாடம் சொல்லும் சிறிய புலவர்கள் அங்கங்கே இருந்தார்கள். அத்தகையவர்களாகிய அரியலூர்ச் சடகோபையங்கார், செங்கணம் விருத்தாசல ரெட்டியார் முதலியவர்களிடம் ஐயர் அவர்கள் சில நூல்களைக் கற்றார்கள். ஐயர் அவர்களுடைய தந்தையாருக்குத் தம் குமாரரைப் பெரிய சங்கீத வித்து வானாக ஆக்கவேண்டுமென்ற ஆசையே முதலில் எழுந்தது. ஆனால் இவர்களுக்குத் தமிழில் உண்டான பெரும் பசியைக் கண்டபோது அந்தத் துறையில் இவர்களை ஈடுபடுத்துவதுதான் தம்முடைய கடமை என்பதை அவர் உணர்ந்தார். அதனால் எங்கெங்கே தமிழ் நூல்களைப் பாடம் சொல்லுகிறவர்கள் இருக்கிறார்களோ, அந்த அந்த ஊர்களுக்கெல்லாம் குடியேறித் தம்முடைய குமாரர் தமிழ்க் கல்வி பெறும்படி செய்து வந்தார்.

அப்போது திருவாவடுதுறை ஆதீனத்தில் பெருங் கவிஞராகவும் சிறந்த புலவராகவும் திகழ்ந்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தது. அவர் பல மாணக்கர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துவருகிறார் என்ற செய்தி ஐயர் அவர்களின் தந்தையார் காதில் விழுந்தது. ''நம் பிள்ளையையும் அந்த மகாவித்துவானிடம் சேர்த்துவிட வேண்டும்'' என்ற ஆவல் அவருக்கு உண்டாயிற்று.
1870- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐயர் அவர்கள் வாழ்க்கையின் இரண்டாம் பகுதி தொடங்கியது. மாயூரத்தில் இருந்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் இவர்கள் மாணக்கராகச் சேர்ந்தார்கள். அதுமுதல் அந்தத் தமிழ்க் கடலின் மறைவு வரையில் (1.2.1876) உடனிருந்து பலவகையான தமிழ் நூல்களைக் கற்றார்கள். அப்புலவர்பிரான் அவ்வப்போது இயற்றிவந்த நூல்களை எழுதுவதும், திருவாவடுதுறை மடத்தின் ஆதீனகர்த்தர்களாக இருந்த ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடன் பழகுவதும், அந்த மடத்துக்கு வரும் தமிழ்ப் புலவர்களிடத்திலும் வடமொழிவாணரிடத்திலும் சங்கீத வித்துவான்களிடத்திலும் நெருங்கிப் பழகுவதும் போன்ற செயல்களால் இவர்களுக்குக்கிடைத்த அநுபவம் வேறு யாருக்கும் கிடைத்தற்கு அரிது. அத்தகைய அநுபவத்தினால் ஐயர் அவர்கள் பெற்ற பயன் மிக அதிகம். எந்தப் பொருளானாலும், எத்தகைய மனிதரானாலும், எந்த விதமான நிகழ்ச்சியானாலும் கூர்ந்து உணரும் இயல்பு ஐயர் அவர்களிடம் சிறந்திருந்தது. அதனால் அக்காலத்தில் அவர்கள் கண்டவையும் கேட்டவையும் அப்படி அப்படியே இவர்களுடைய இளநெஞ்சில் நன்றாகப் பதிந்தன. பெரிய ஆதினத்தின் தொடர்பால் பலவகை மக்களின் பழக்கம் இவர்களுக்கு ஏற்பட்டது. பெரும்புலவருடைய தொடர்பால் பல நூல்களில் அறிவு உண்டாயிற்று. பல கலைஞருடைய நட்பினால் பல துறையிலும் அறிவு சிறந்தது. வெவ்வேறு ஊர்களுக்குத் தம்முடைய ஆசிரியருடன் செல்ல வேண்டியிருந்தமையால் பல தலங்களைப்பற்றிய செய்திகளும் அங்கங்குள்ள பெரிய மனிதர்களின் பழக்கமும் ஐயர் அவர்களுக்குக் கிடைத்தன.

பிள்ளையவர்கள் மறைவுக்குப்பின்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தொடர்பு ஐயர் அவர்களுக்குப் பின்னும் இறுகலாக அமைந்தது. அதற்கு முன் பிள்ளையவர்கள் மூலமாக ஆதீனத்தின் தொடர்பு இருந்துவந்தது. அதற்குப்பின் ஆதீனகர்த்தராகிய ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடமே பாடம் கேட்கப் புகுந்தார்கள் ஐயர் அவர்கள். அதோடு மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும் பணியையும் மேற்கொண்டார்கள். இதனால் இவர்களுடைய தமிழறிவு உரம் பெற்று வந்தது.
அக்காலத்தில் கும்பகோணம் அரசாங்கக் காலேஜில் தியாகராச செட்டியார் என்ற பெரும்புலவர் தமிழாசிரியராக இருந்தார். அவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் படித்தவர். அவர் ஓய்வு பெறவேண்டிய காலம் வந்தபோது அவர் தம்முடைய இடத்தில் ஐயர் அவர்களை நியமிக்கும்படி செய்தார். 1880-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி முதல் ஐயர் அவர்கள் கல்லூரித் தமிழாசிரியராக வேலை பார்க்கத் தொடங்கினார்கள்.
நிறைந்த தமிழ்ப் புலமை, எதையும் சுவையாக எடுத்து விளக்கும் ஆற்றல், இசைப்பயிற்சி, அன்பு முதலிய இயல்புகளை இவர்கள் சிறப்பாகப் பெற்றிருந்தமையால் கல்லூரி மாணாக்கர்கள் உள்ளத்தை எளிதில் கவர்ந்தார்கள். ஆங்கில மோகம் உச்சநிலையில் இருந்த காலம் அது. ஆங்கிலமும் பிறபாடங்களும் கற்பிக்கும் பேராசிரியர்களிடம் மாணக்கர்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்ல மதிப்பு இருந்து வந்தது. இங்கிலீஷ்காரர்கள் சிலர் அந்தப் பாடங்களைக் கற்பித்து வந்தார்கள். அதனாலும் அவற்றிற்கும் அவற்றைக் கற்பிப்பவர்களுக்கும் மதிப்பு உயர்ந்திருந்தது. தமிழாசிரியர்களுக்கு அத்தகைய மதிப்பு இல்லை. அவர்களுக்குக் கிடைத்த ஊதியமும் மிகக் குறைவு. கல்லூரிச் சேவகனுக்கு அடுத்தபடி சம்பளம் வாங்கினவர் தமிழாசிரியரே.

இத்தகைய நிலையில் ஐயர் அவர்கள் மாணாக்கர்களின் உள்ளத்தைப் பிணித்ததோடு மற்ற ஆசிரியர்களுக்குச் சமமான மதிப்பையும் பெற்றார்கள். ஆங்கிலம் சிறிதும் அறியாவிட்டாலும், ஆண்டில் இளைஞராக இருந்தாலும், அவர்களுடைய புலமையும், பண்பும் மாணாக்கர்களும் ஆசிரியர்களும் பிறகும் இவர்களைச் சிறந்தவர்களாக மதிப்பதற்குரிய காரணங்களாக இருந்தன.
காலேஜில் ஆசிரியராகப் புகுந்த ஆண்டிலேயே (அக்டோபர் மாதம்) ஐயர் அவர்களுக்கும் கும்பகோணத்தில் ஜில்லா முன்சீபாக இருந்த சேலம் இராமசுவாமி முதலியாரவர்களுக்கும் பழக்கம் உண்டாயிற்று. அந்தப் பழக்கமே ஐயர் அவர்கள் பிறந்ததன் பயனைத் தமிழுலகத்துக்குக் கிடைக்கும்படி செய்யக் காரணமாயிற்று. முதலியார் சிந்தாமணியைப் பாடம் சொல்லும்படி ஐயர் அவர்களிடம் கேட்டுக்கொண்டார். அதனை முன்பு பாடம் கேட்டறியாதவர்கள் இவர்கள்; அந்த நூலைப் பார்த்தது கூட இல்லை. ஆயினும் தைரியமாகப் பாடம் சொல்லப் புகுந்தார்கள். ஏட்டுச் சுவடியை வைத்துக்கொண்டு பாடம் சொன்னார்கள். சிந்தாமணியில் ஆழ்ந்தார்கள். தாம் அதுகாறும் படித்த நூல் குவியல்களால் அறியவொண்ணாத பலவற்றை அதில் கண்டார்கள். அது ஜைனசமய நூலாதலால் பல செய்திகள் ஐயர் அவர்களுக்கு விளங்கவில்லை. அவற்றையெல்லாம் ஜைனர்களிடம் சென்று கேட்டு அறிந்தார்கள். சிந்தாமணிக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையைப் படித்தார்கள். அவருடைய உரைப்போக்கும் அதனிடையே அவர் காட்டியிருக்கும் மேற்கோள்களும் ஏதோ ஒரு புதிய பிரபஞ்சத்தையே அவர்கள் அகக்கண்முன் தோற்றுவித்தன.

தமிழ் மக்கள் செய்த தவத்தின் பயனாக இவர்களுக்குச் சிந்தாமணியைப் பதிப்பிக்கவேண்டும் என்னும் எண்ணம் உண்டாயிற்று. ஆராய்ச்சி நடைபெற்றது. மேட்டுமடையில் நீர் பாய்வதுபோன்ற வேதனையைப் பல சமயத்தில் அவர்கள் அடைந்தார்கள். ஆனாலும் விடாப்பிடியாக முயன்று 1887-ஆம் ஆண்டு சிந்தாமணியை வெளியிட்டார்கள். அந்தப் பதிப்பைக் கண்ட தமிழ் நாட்டினர் மிகவும் ஆனந்தமடைந்து களிக்கூத்தாடினர். அதுமுதல் ஐயர் அவர்கள் பழைய நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

சிந்தாமணிக்குப்பின் பத்துப்பாட்டு வெளியாயிற்று. அதன்பின் சிலப்பதிகாரம், புறநானூறு, மணிமேகலை என்பவை வந்தன. புறநானூறு கண்ட தமிழுலகம் ஏதோ ஒரு புதிய கண்டத்தைக் கண்டு பிடித்தது போன்ற மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அடைந்தது. ஆராய்ச்சிக்காரர்களுடைய மூளை வேலைச் செய்யத் தொடங்கியது. பழந்தமிழ் மக்களின் வாழ்க்கையைப்பற்றிய ஆராய்ச்சிகளை அறிஞர்கள் எழுதத் தொடங்கினார்கள்.
இவ்வாறு ஐயர் அவர்கள் பழந்தமிழ் நூல்களை அச்சிடும் தொண்டை விடாது செய்து வந்தார்கள். ஐம்பெருங் காப்பியங்கள் என்று சேர்த்துச் சொல்லும் நூல்களில் கிடைத்த சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, என்ற மூன்றையும் அவர்கள் வெளியிட்டார்கள். பத்துப்பாட்டு அவர்களுடைய உழைப்பால் தமிழுலகம் காண முடிந்தது. எட்டுத்தொகைகளில் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு என்பன மலர்ந்தன. பெருங்கதை, புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல் சங்கர நமச்சிவாயர் உரை என்னும் இலக்கிய இலக்கணங்கள் வெளிவந்தன. இவற்றையன்றி, திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், திருக்காளத்திப் புராணம் முதலிய பல புராணங்களும், கோவை, உலா, கலம்பகம், பிள்ளைத்தமிழ், இரட்டை மணி மாலை, அந்தாதி, குறவஞ்சி முதலிய பலவகைப் பிரபந்தங்களும் குறிப்புரைகளுடன் வெளிவந்தன. தம்முடைய ஆசிரியர் இயற்றிய பிரபந்தங்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு தொகுதியாக வெளியிட்டார்கள்.

ஏட்டில் இருக்கிறதை அப்படியே பெயர்த்துக் காகிதத்தில் அச்சிடும் வேலை அன்று, ஐயர் அவர்கள் செய்தது. புத்தகப் பதிப்பு அவ்வளவு எளிதாக இருந்தால் எத்தனையோ அறிஞர்கள் அதை முன்பே செய்து புகழ் பெற்றிருப்பார்கள். ஏட்டில் உள்ள பாடம் பிழைபட்டிருக்கும். பல இடங்களில் இன்னதென்றே ஊகிக்க முடியாத அளவுக்குச் சிதைவு உண்டாகியிருக்கும். அவற்றையெல்லாம் பல நூல் அறிவினாலும் இயற்கையான அறிவுத் திறமையாலும் விடா முயற்சியினாலும் திருவருளின் துணையாலும் ஆராய்ந்து செப்பம் செய்யவேண்டும். ஐயர் அவர்கள் திக்குத் தெரியாத காட்டில் நுழைந்து தாமே வழியமைத்துக் காடு நாடாக்கிய பெருந் தொண்டர். அவர்களுடைய பதிப்பு என்றாலே தமிழ்ப் புலவர்களும் ஆராய்ச்சியாளரும் போற்றிப் பாதுகாக்கிறார்கள். ஒவ்வொரு நூலிலும் முன்னே உள்ள முகவுரையும், ஆசிரியர் வரலாறும், நூலைப்பற்றிய குறிப்புக்களும், பிற செய்திகளும் மிகமிக அற்புதமானவை. நூலில் ஒவ்வொரு பக்கத்திலும் அடிக்குறிப்பில் பல வகையான விளக்கங்களும் பல நூல்களிலிருந்து எடுத்த ஒப்புமைப் பகுதிகளிலும் காட்சி தரும். அவை ஐயர் அவர்களுடைய பரந்த நூற்புலமைக்குச் சான்றாக விளங்கும். இறுதியில் நூலில் கண்ட சொற்களுக்கும் பொருள்களுக்கும் அகராதி இருக்கும். ஆசிரியரின் உதவியின்றியே பயிலும் வகையில் அமைந்தவை ஐயர் அவர்களின் பதிப்புக்கள்.

இந்த முறையில் கண்ணாடிபோல மேல் நாட்டாரும் வியக்கும் வண்ணம் ஆங்கிலமே அறியாத தமிழ்ப் பண்டிதர் புதிதாக இத்துறையில் புகுந்து சாதித்தார் என்று சொன்னால் அது அதிசயமான செயல் அல்லவா?
முன்னுரை முதலியவற்றை எழுதி உரைநடை எழுதும் ஆற்றலைச் சிறிய அளவிலே வெளிப்படுத்திய ஐயர் அவர்கள், தாம் பதிப்பித்த நூல்களின் அங்கமாக மணிமேகலைக் கதைச் சுருக்கம், புத்த தர்மம், உதயணன் கதைச் சுருக்கம் என்பவற்றை எழுதியளித்தார்கள்.

கும்பக்கோணம் கல்லூரியிலிருந்து சென்னைக் கல்லூரிக்குத் தமிழாசிரியராக 1903-ஆம் ஆண்டு வந்தார்கள், அப்பால் அந்தப் பதவியிலிருந்து 1919-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்கள். கல்லூரி ஆசிரியர் என்ற அலுவலிலிருந்து ஓய்வு பெற்றார்களேயன்றி மாணக்கர்களுக்குப் பாடம் சொல்லும் ஆசிரியத் தொண்டிலிருந்தோ, நூல்களைப் பதிப்பிக்கும் பதிப்பாசிரியத் தொண்டிலிருந்தோ, அவர்கள் ஓய்வு பெறவில்லை. உண்மையில் அவ்வேலைகள் பின்னும் பன்மடங்கு பெருகின.

கல்லூரியில் வேலையாக இருந்தபோதே வீட்டில் தனியே இவர்களிடம் பலர் பாடம் கேட்டார்கள். மகாபாரதப் பதிப்பாசிரியராகிய மகா மகாபாத்யாய ம. வீ. இராமாநுஜாசாரியார், திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபராக விளங்கிய சொக்கலிங்கத் தம்பிரான் முதலிய பலர் இவ்வகைகளில் பாடம் கேட்டவர்கள். இவர்களிடம் இருந்து ஆராய்ச்சி முறையைக் கற்றுக்கொண்டு தாமே நூல்களைப் வெளியிட்டவர்கள் சிலர். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், இ. வை. அனந்தராமையர் முதலியவர்கள் இத்தகைய வரிசையில் இருந்தவர்கள். இவர்கள் ஏடு தேடி ஆராய்ந்து பதிப்பித்து வெளியிட்ட நூல்களைத் படித்து அந்த முறையையும் அறிந்த சில புலவர்கள் பழந்தமிழ் நூல்களைத் தாமே வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

1924 முதல் 1927 வரையில் ஐயர் அவர்கள் ராஜா அண்ணாமலை செட்டியாரவர்கள் நிறுவிய மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் தலைவராக இருந்தார்கள்.

அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு, தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதோடு தம்முடைய அநுபவங்களை எளிய இனிய உரைநடையில் எழுதத் தொடங்கினார்கள். இந்தத் துறையில் ஐயர் அவர்கள் தொண்டாற்றப் புகுந்தபோது பெரியவர்களும் சிறுவர்களும், ஆடவரும் பெண்டிரும், புலவர்களும் பிறரும் ஒருங்கே இவர்கள் எழுத்தைப் படித்து இன்புற்றார்கள். பத்திரிகைகளில் இவர்கள் கட்டுரைகள் வெளியாயின. மாதந்தோறும் முதலில் ஐயர் அவர்களின் கட்டுரை ஒன்றைத் தாங்கிச் சிறப்படைந்தது கலைமகள். தமிழ் நாட்டுப் பத்திரிகைகளின் மலர்கள் ஐயர் அவர்களின் கட்டுரைகளோடு மலர்ந்தன.
தம்முடைய ஆசிரியராகிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் வரலாற்றை வெளியிடவேண்டும் என்னும் நெடு நாள் ஆர்வத்தால் அவர்கள் பல செய்திகளைத் தொகுத்து வைத்திருந்தார்கள். அவற்றைக் கொண்டு மிக விரிவாக அச் சரித்திரத்தை இரண்டு பாகங்களாக எழுதி முடித்தார்கள். தம்முடைய வாழ்க்கையில் எந்தப் பெரியார்களோடு பழக நேர்ந்ததோ அவர்களைப் பற்றிய வரலாறுகளையும் நிகழ்ச்சிகளையும் சுவை ததும்ப எழுதினார்கள். தியாகராச செட்டியார் சரித்திரம், கோபாலகிருஷ்ண பாரதியார் சரித்திரம், மகா வைத்தியநாத ஐயர் சரித்திரம், கனம் கிருஷ்ணையர் வரலாறு என்பன இவர்களுடைய அன்பையும் எழுதும் ஆற்றலையும் நன்றியறிவையும் விளக்குகின்றன. சிலருடைய வரலாற்றைச் சுருக்கமாக எழுதினார்கள்; இந்த வகையில் பூண்டி அரங்கநாத முதலியார், மணிஐயர் வி. கிருஷ்ணசாமி ஐயர், திவான் சேஷாயா சாஸ்திரிகள் முதலியவர்களைப் பற்றிய கட்டுரைகள் வெளியாயின.

இவர்களுடைய பெருமையைத் தமிழுலகம் மெல்ல மெல்ல உணரலாயிற்று. அரசாங்கத்தார், 1906-ஆம் ஆண்டு, 'மகாமக்கோபாத்தியாயர்' என்ற பட்டத்தை அளித்தார்கள். 1917-ஆம் ஆண்டு பாரத தர்ம மண்டலத்தார், 'திராவிட வித்தியா பூஷணம்' என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்கள். 1925-ஆம் ஆண்டு காமகோடி பீடாதிபதிகளாகிய ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகளவர்கள், 'தாக்ஷிணாத்திய கலா நிதி' என்ற பட்டத்தை அருளினார்கள். இவர்கள், சென்னை, மைசூர் ஆந்திரா, காசி முதலிய இடங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் பல வகையில் கலந்து தொண்டாற்றினார்கள். 1932-இல் சென்னைப் பல்கலைக் கழகத்தார் 'டாக்டர்' பட்டம் அளித்தார்கள்.
1935-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 6-ஆம் தேதி ஐயர் அவர்கள் 80-ஆண்டுகள் நிறைந்து விளங்கினார்கள். அவர்களுடைய சதாபிஷேக விழாவைத் தமிழுலகம் முழுவதும் கொண்டாடியது. சென்னையில் பல்கலைக் கழக மண்டபத்தில் இவ்விழாவைத் தமிழுலகம் முழுவதும் கொண்டாடியது. சென்னையில் பல்கலைக் கழக மண்டபத்தில் இவ்விழா மிகமிகச் சிறப்பாக நடைபெற்றது.

பழுத்த பருவத்திலும் ஐயர் அவர்கள் தமிழ்த் தொண்டு வீறுகொண்டு நடைபெற்றது. குறுந்தொகையை விரிவான உரையுடன் பதிப்பித்தார்கள். சிவக்கொழுந்து தேசிகர், குமரகுருபரர் என்னும் புலவர்களின் பிரபந்தத் திரட்டுகள் குறிப்புரையுடன் வெளியாயின. தமிழன்பர்களின் விருப்பப்படி ஆனந்த விகடனில் வாரந்தோறும் தம்முடைய வரலாற்றை ''என் சரித்திரம்'' என்ற தலைப்பில் எழுதத் தொடங்கினார்கள். 1940-ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கிய அது 122 அத்தியாயங்களோடு சுய சரித்திரமாக வரும் நிலை பெற்றது.

1942-ஆம் ஆண்டு உலகப் பெரும்போர் நிகழ்ந்தபோது ஐயர் அவர்கள் தம் குடும்பத்துடன் திருக்கழுக்குன்றம் சென்று தங்கினார்கள். அங்கே ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி அந்தத் தலத்தில் தமிழ்த்தாயின் தவப்புதல்வராகிய ஐயர் அவர்கள், தாம் பிறந்த காலத்தில் கண்ட நிலையை மாற்றித் தமிழ் மக்களைப் பழந்தமிழ்ச் செல்வத்துக்கு உரிமையுடையவர்களாக ஆக்கி, ஆசி கூறிவிட்டு இறைவன் திருவடியை அடைந்தார்கள்.

ஐயர் அவர்கள் தொகுத்து வைத்துச் சென்ற ஏடுகள் இப்போது அடையாறு கலா «க்ஷத்திரத்தின் தலைவராகிய ஸ்ரீமதி ருக்மணி தேவியாரால் ஒரு நூல் நிலையமாக அமைத்துப் பாதுகாக்கப் பெற்று வருகின்றன. அந்நூல்களை ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடவேண்டும் என்னும் ஆர்வத்துடன் பல நூல்களை இந்நிலையத்தார் வெளியிட்டு வருகிறார்கள். 

ஐயர் அவர்களுடைய ஒரே புதல்வராகிய ஸ்ரீ கல்யாணசுந்தர ஐயர் அவர்கள் தம்முடைய தந்தையாருக்கு எள்ளளவும் குடும்பக் கவலையே இல்லாமற் செய்து இவர்களின் நூலாராய்ச்சி தடையின்றி நடைபெறச் செய்ததோடு, தாமும் அவ்வாராய்ச்சியில் கலந்துகொண்டு உழைத்து வந்தார்கள். ஐயர் அவர்களின் மாணாக்கராகவும், அவருக்கு ஆராய்ச்சியில் உதவிபுரியும் துணைவராகவும், அவருடைய காரியதரிசியாகவும், பாதுகாவலராகவும் இருந்தார் என்றே இவர்களைச் சொல்லவேண்டும். ஐயர் அவர்கள் காலத்துக்குப் பிறகு அவர்கள் பெயரால் அமைந்த நூல் நிலையப் பொறுப்பாளராக இவர்களே அமைந்து நூல்களை வெளியிட்டார்கள். அவர் 1950ஆம் ஆண்டில் இவர் தம் பூதவுடம்பை நீத்தார். அவருடைய குமாரர் ஸ்ரீ சுப்பிரமணிய ஐயர் அவர்கள் தம்முடைய தந்தையார் செய்த தொண்டுகளைச் செய்துவருகிறார்கள்.

1948-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ஆறாம்தேதி சென்னை அரசினர் கல்லூரியில் ஐயர் அவர்களுடைய முழுஉருவச் சிலையன்றை நிறுவினார்கள். தமிழ்க் கடலின் விரிவை மீட்டும் தமிழுலகத்துக்குக் காட்டிய ஐயர் அவர்களின் திருவுருவம் பெருங்கடலை நோக்கி நிற்கும் கோலத்தை இன்றும் கண்டு மகிழலாம்.

1955-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி ஐயர் அவர்கள் பிறந்து நூறு ஆண்டுகள் நிறைவடைந்தன. அதனை, அவர்கள் பெயர் கொண்ட நூல் நிலையம் மிகச் சிறப்பாகக் கொண்டாடிற்று.
ஐயர் அவர்களுடைய குணநலங்கள் பல. சிறந்த பண்பு உள்ளவர்கள் இவர்கள். இணையற்ற ஆசிரியர். பலவகை மாணாக்கர்களுடைய உள்ளம் அறிந்து தக்கவண்ணம் பாடம் சொல்வதில் வல்லவர்கள் புலமைப் பெருங்கடல்; கவிஞர்; சிறந்த எழுத்தாளர்; முன்னும் பின்னும் கண்டறியாத அற்புதப் பதிப்பாசிரியர்; சுப்பிரமணிய பாரதியார் தாம் பாடிய பாட்டில்.

''கும்பமுனி எனத்தோன்றும் சாமிநாதப் புலவன்''
என்று ஐயர் அவர்களைச் சிறப்பிக்கிறார்.
''பொதியமலைப் பிறந்த தமிழ் வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றித் துலங்குவாயே''
என்று அவர் பாடியிருப்பதற்குமேல் நாம் என்ன சொல்ல முடியும்?

தமிழர்களின் வீர வரலாறு

தமிழர்களின் வீர வரலாறு: பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரையார், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர், அரேபி யருடனும், கிரேக்கருடனும், உரோம ருடனும், ஜாவனியருடனும் மற்ற அயல் நாட்டினருடனும் வாணிகத்தொடர்பு கொண்டிருந்தனர் என்ற கூறுகிறார். இதை எடுத்துக்காட்டும் வகையில் நில நூலாசிரியர்கள் பிளினி (கி.பி. 75), தாலமி (கி.பி. முதல் நூற்றாண்டு) மற் றும் செங்கடற்பயணம் ஆய்வுக்குறிப்புக் கள் கடைசியில் (Periplus Maris Erithrerien) எரித்திரையன் இந்துமாக் கடல் போன்ற நூல்களில் குறிப்பிடப் படும் தமிழகத்தில் இருந்த துறைமுக நகரங்களை விரிவாக ஆய்வு செய் துள்ளார். 


அவற்றில் சில நகரங்கள்:

1. பாலைப்பட்டினம்: (palae Patme) Dabhol என்று தற்போது குஜராத்தில் விளங்குகின்றது.

2. மந்தராகிரி: (Mandagore) Bankote என்று தற்போது பெயர் பெற்றுள்ளது. மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. கப்பல் கட்டுமான நகரமாக விளங்கியது.

3. கண்ணனூர்: கேரளாவில் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

4. Baryagaza: குஜராத்தில் உள்ள புரோச் (Broach).

5. Colchi - தற்போதுள்ள Cochi சிலப்பதிகாரத்தில் கொற்கை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

6. Kayal - Morcopola வால் Coil என்று குறிப்பிடப்பட்டுள்ள நாகர் கோவில்.

7. Tyndis- (பொன்னானி) தமிழகத் தின் முதல்தர துறைமுகம் (மஜும்தார் இதனை தமிழகத்தின தொண்டி துறைமுகம் எனக் கூறுகிறார்).

8. முசிறி (Cranganore) கேரளாவில் உள்ளது. அரபு நாட்டுடன் கடல் வணிகம் நடந்தது.

9. நீல்கண்டா (Nelganda என்று Fabricius என்பரால் அழைக்கப்பட்டது. Melkynda என்று கால்டுவெல் அழைத் தார்). இது கோட்டயம் அருகே உள் ளது.

10. Camara (காவிரிப்பூம்பட்டினம்)

11. Poduca (பாண்டிச்சேரி) அரிக் கமேடு ஆய்வுகள் இதனை உறுதிப் படுத்தியுள்ளது.

12. Supatana (Fairtown) (சென்னைப் பட்டினம்) மதராஸ் என்ற அழைக் கப்பட்ட சென்னை. இந்த துறைமுகம் கங்ககைக்கரை வரை இணைப்புச் சாலைகள் கொண்டது).

13. Maisolai or Ma Solia இது மசூலிப்பட்டணத்தை குறிக்கின்றது. இங்கிருந்து மரக்கலங்கள் (Vessels) சைனா, மெக்கா, சுமத்ரா போன்ற நாடுகளுடன் வாணிகம் நடந்தது.

14. கண்டசாலா: இந்த துறைமுகம் கிருஷ்ணா நதி முகத்துவாரத்தில் உள்ளது. இது சுவர்ண தீவுடன் வாணிபத் தொடர்பு கொண்டது.

15. சரித்திரபுரா: சீனாவின் யுவான் சுவாங்கினால் குறிக்கப்பட்டுள்ளது. இது ஒரிசாவில் உள்ளது.

16. Paloura (பாலூரா) ஒரிஸ்ஸாவில் உள்ளது. பர்மாவுடன் வணிகம் நடந்தது.

17. தாம்ரலிப்தி (Tamaralipti): வங்கா ளத்தில் உள்ளது. மவுரிய பேரரசர் அசோகர் இங்கு வந்தார். அப்போது போதிமரத்தின் கிளை தாம்ரபோன் என்றழைக்கப்பட்ட சிலோனுக்கு அனுப்பப்பட்டது.

மேலும் கிரேக்க நாட்டில் இருந்து வந்த மார்க்கோபோலோ மற்றும் நிக்கோலா கோண்டி (Nichoicolo Conti) ஆகியோர், தென்னிந்தியர்கள் கப் பல்கள் கட்டும் துறையில் சிறந்து விளங்கினார்கள். 

அவர்கள் கட்டிய கப்பல்கள் 25 யானைகளை ஒரே சமயத்தில் ஏற்றிச்செல்லக் கூடிய வலிமை பெற்றவைகளாக விளங்கின என்று கூறினார்கள். தமிழில் நாவாய் என்ற சொல்லே ஆங்கிலத்தில் Navy என மாறியது. இது தமிழின் சிறப்பு மற்றும் கடல் வணிகத்தின் சிறப்பு ஆகும்.

எனவே முதல் மனிதன் திராவி டத்தை உள்ளடக்கிய லெமூரியர்கள் முதல் தற்போதுள்ள திராவிடர்கள் வரை (குமரி முனை முதல் கங்கைக் கரையைத் தொடும் விந்திய மலை வரை பரவியவர்கள்) கடல் வாணிகத்தில் சிறந்து விளங்கி பொன்னும், மணியும் குவித்தனர் என்பதை அறியலாம். பெருகிய செல்வம் இலக்கியங்கள் படைக்க உதவின. திராவிடம் என்பதும் திருவிடம் என்பதும் திரைகடல்களால் சூழ்ந்த திரைவிடமாக விளங்கியது.

ஆரிய இலக்கியங்கள்

இந்தியாவின் தொன்மையான மொழிகள் தமிழும், சமஸ்கிருதமும் ஆகும். சமஸ்கிருதம் இன்று எந்த மாநில மக்களாலும் பேசப்படவில்லை. 2001இல் சமஸ்கிருதம் பேசுபவர்கள் எண்ணிக்கை 14135 (ஆதாரம் Encyclopedia of wicky pedia). சமஸ்கிருதம் எந்தக் காலத்திலும் பேச்சு வழக்கில் இருந்ததில்லை. (இந்துமத தர்ம வினா _ விடை -_ ஆசிரியர் சங்கராச்சாரியார்) இதற்கு இலக்கணம் அமைத்து சமஸ்கிருதம் என்று பெயரிட்டவர் பனை என்ற ஊரில் பிறந்த கி.மு. 400 அய் சார்ந்த பாணினி (Panini) என்பவர் ஆவார்.

1. எரித்திரையன் கடற்பயணம்: செங்கடற்பயணம் அல்லது செங்கடல், பாரசீக வளைகுடா மற்றும் இந்துமாக் கடல் அடங்கிய கடற்பயணம்

2. Ratnaray - அரபிக்கடல்

3. Mahadadhi - வங்காள விரிகுடா

4. பாணிணி எழுதிய இலக்கணம் நூல் (சமஸ்கிருதம்) எட்டு அத்தியா யங்களைக் கொண்டது. எனவே அஷ்டத்யாயி என அழைக்கப்பட்டது. இது தமிழ் மரபின்படி அமைந்த பெயர். 

உதாரணம்: எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, நாலடியார். சமஸ்கிருதம் தோன்றி பலகாலம் இலக்கியங்கள் இயற்றப்படவில்லை. 

கி.பி. முதலாம் நூற்றாண்டு வரை சமஸ்கிருதத்தில் இலக்கியம் என்று எதுவுமே கிடையாது. சமஸ்கிருதத்திற்கு மாறாக தமிழ் பல. இலக்கியங்களைக் கொண்டிருந்தது. அவை தமிழர் வாழ்க்கை மட்டுமல்ல, இந்தியாவின் பிற பகுதிகள் பற்றியும் பல அரிய தகவல்களை தந்தன.

இதிகாசங்கள்

வேதகாலத்தில் இயற்றப்பட்ட ரிக்வேதம் அவெஸ்தன் என்ற பாரசீக நூலின் இந்திய பதிப்பு ஆகும். இதனை தொடர்ந்து யஜுர், சாம அதர்வன வேதங்கள் ஆகும். பின்னர் இராமா யணம், மகாபாரதம் போன்ற காவி யங்கள் கி.மு. 12ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை இயற்றப் பட்டன. ஆனால் இவை அனைத்தும் எழுத்து வடிவில் எழுதப்பட்டவை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்தான். இவை நடந்தது _ ஏறக்குறைய குப்தர்கள் ஆட்சிகாலத்தில்தான்.

இராமாயணத்தில் வால்மீகியால் சில காண்டங்கள் புனையப்பட்டன. பிற் காலத்தில் அயோத்தியா காண்டம், பால காண்டம், உத்ரகாண்டம் முதலியன மற்ற ஆசிரியர்களால் எழுதி சேர்க்கப்பட்டன. இதேபோல் மகா பாரதத்தின் உண்மையான காவிய நாயகன் அர்ஜுனன். இவனின் வில் லாற்றலினையே மூல பலமாகக் கொண்டு பல வீரச்செயல்கள் நடை பெற்றன. 

இப்பேர்பட்ட மாவீரன் போர்க்களத்தில் மனச்சோர்வடைந்து போரிட மறுப்பதாக சித்திரிக்கப் பட்டுள்ளது. அவனை போரில் ஈடு படுத்தும் பணி பரமாத்மா கிருஷ்ண னால் பகவத்கீதை மூலமாக நிறை வேற்றப்படுகின்றது. இந்த பகவத்கீதை மகாபாரதம் இயற்றிய பின்பு பல நூற்றாண்டுகள் கழித்து பிற்சேர்க்கை யாக சேர்க்கப்பட்டதாகும். வீரத்தை சித்திரிக்கவேண்டிய நூல் பக்தி நூலாக மாற்றம் அடைந்தது.

தமிழ் இலக்கியத்தின் சிறப்புகள்:

அரசர்களையும், கடவுள்களையும், மதச்சடங்குகளையும் மய்யமாக வைத்து புனையப்பட்டவை சமஸ்கிருத இலக்கியங்கள். தமிழர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தார்கள். முதல் தமிழ்ச்சங்கம் 4400 ஆண்டுகள் தென் மதுரையில் இருந்தது. இந்த முதல் சங்கத்தில் 4449 புலவர்கள் தங்கள் படைப்புகள் சமர்ப்பித்தார்கள். இடைச்சங்கம் கபாடபுரத்தில் 3700 ஆண்டுகள் நடைபெற்றது. 

அதில் உறுப்பினர்களாக இருந்தவர்களில் ஒருவர் பாண்டுரெங்கன் திரையன் மாறன் (துவாரகை மன்னன்). இந்தச் சங்கத்தில் இயற்றப்பட்ட நூல்களில் தொல்காப்பியமும், அகத்தியமும் அடங்கும். இறுதியாக தற்போதைய மதுரையில் கடைச்சங்கம் 1850 ஆண் டுகள் நடைபெற்றது. எனவே சங்க காலம் (4449+3700+1850 = 9999) ஆண் டுகள் கொண்ட ஒரு நீண்ட நெடிய காலம். இது தமிழ் நீண்ட காலம் சிறப்புடன் இருந்ததை அறியலாம்.

தமிழர்களின் வீர வரலாறு:

வீரம் என்ற சொல்லை மற்ற மொழிகளுக்குத் தந்தது தமிழ் மொழியாகும். உதாரணம் வீரபூமி, வீரசக்கரா விருது, மகாவீர் தியாகி, மாகவீர்பிரசாத், மகாவீரர், இதேபோல் ஆங்கிலத்தில் சொல்லப்படும் வேலர் என்ற வேல் ஆயுதத்துடன் தொடர்பு கொண்டிருக்கவேண்டும். எனவே வீறு கொள்ளுதல், வேலெறிதல் சேரனின் விற்கொடி, சோழனின் புலிக்கொடி முதலானவை தமிழ் மண்ணைச் சார்ந் ததாகும். தமிழர்கள் வீரத்தை பெரிதும் போற்றினார். 

வீர விளையாட்டுகள், போட்டிகள், மிருகங்களை அடக்குதல் முதலியன தமிழர்களின் வாழ்க்கையில், திருமணங்கள் மற்றும் திருவிழாக் களுடன் இரண்டறக் கலந்தவை. புலியை வேட்டையாடி புலிப்பல்லுடன் கூடிய மங்கல நாணைக் கொண்டு வரும் மணமகனுக்கு மணமகளை பரிசாகத் தந்தார்கள். போர்க் களத்திலே புறமுதுகு காட்டுவது வீரனுக்கு அழகல்ல.

மார்பிலே காயப் பட்டு இறப்பதையே பெரிதும் விரும் பினார்கள். இத்தகைய வீர மறவர் களுக்கு இணையான வீரர்களை உலகில் காண முடியாது. முதுகில் காயப்பட்டதினால் பெற்ற மகனை தாயே வெட்டிக்கொன்ற காட்சிகளை இலக்கியங்களிலே காணுகின்றோம். திராவிடர்களின் முக்கியப் போர் ஆயுதங்கள் வாள், ஈட்டி, சூலம், வில் முதலியனவாகும். ஆரியர்கள் குதிரையைப் பெரிதும் பயன்படுத் தினார்கள். மாறாக, மகாபாரதத்தில் பீஷ்மர் முதுகில் அம்புகள் துளைக்க படுத்திருந்தார். இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் 13 முதல் 14 ஆண்டுகள் வரை காவியக் கதாநாயகர்கள் வனவாசம் சென் றார்கள். 

அப்போது அவர்கள் காட்டில் உண்மையாகவே வசிக்கும் புலி, சிங்கம், யானை போன்ற மிகக் கொடிய மிருகங்களுடன் போரிட வில்லை. மாறாக தேவர் உலகத்தில் இருந்து வந்த, சமஸ்கிருதம் பேசும், ஜடாயு, ஜாம் பாவான், வாலி, ஆஞ்ச நேயர், இலங்கைக்கு பாலம் கட்டியதாக சொல்லப் படும் நளன் என்னும் குரங்கு முதலி யனவற்றைத்தான் சந்தித்தார்கள்.

திராவிடநாட்டில் கேரளாவில் ஆலப்புழாவில் நடைபெறும் படகுப் போட்டி, மதுரை ஜல்லிக்கட்டு, திருச்சூர், மைசூர் ஆகிய நகரங்களில் நடை பெறுகின்ற திருவிழாக்களில் யானைகளின் அணிவகுப்பு நடை பெறுகின்றது. இது திராவிடர்களின் கடல் வாணிகத்தின் சிறப்பினையும், காட்டு மிருகங்களை அடக்கி, நாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்துவதையும் தெரிவிக்கின்றது. ஆரிய கலாச்சாரத்தில் உறியடிக்கும் நிகழ்ச்சி திருவிழாக்களில் பெரிதும் காணப்படுகின்றது.

ஆரியர் வரலாறும் - கோவில்களும்:

சரகோணிய (Sargonya) ர்களின் வம்சத்தில் அசுரபணிபால் (Ashurapanipal) (கி.மு. 669_ 627) பாபிலோனியாவை ஆண்டான். அவன் ஈழத்தை ஆண்ட மன்னன் மற்றும் மகன் தாமரிதுவை வென்றான். அவனது அரசு நைல்நதி முதல் காகஸ் மலை வரையிலும், மற்றும் மத்திய தரைக்கடல் முதல் பாரசீக வளைகுடா வரை பரந்து இருந் தது. இந்த மன்னன் சிறந்த நூலகத்தை நிறுவினான். இலக்கியங்களை வளர்த் தான்.

கி.மு. 1000இல் ஆரியர்கள் ஒரு பகுதி யினர் காகஸ் மலைப்பகுதி (ஆர்மெனியா) யில் இருந்து வெளியேறி பாரசீகத்தில் தங்கினார்கள். இதன்பின் பாரசீகம் எழுச்சி பெற்றது. யூதர்களால் “The Lords” மற்றும் ‘anointed’ என்ற அழைக் கப்பட்ட சைரஸ் (Syrus). அவரது மகன் ஷெர்ஷா (கி.மு. 486_465) இருவரும் அய்ரோப்பா வரை படையெடுத்துச் சென்று கிரேக்க கட்டடங்களையும், கோவில்களையும் கொளுத்தினார்கள். இதற்குப் பழி வாங்க அலெக்ஸாண்டர் கி.மு. 331இல் பாரசீக நகரங்களைக் கொளுத்தினார்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் தான், இந்தியாவுக்குள் கி.மு. 1500இல் நுழைந்த ஆரியர்கள் கொஞ்சம் கொஞ் சமாக வளர்ந்து கி.பி. 325 இல் வைசிய ரான குப்தர்களால் கருடக்கொடியுடன் கூடிய வைணவப் பேரரசை நிறுவி னார்கள். இவர்கள் காலத்தில் வேதமதம், வைணவமதமாக மாறி புராணங்கள், இதிகாசங்கள் வளர்ந்தன. குப்த மன்னர்கள் பாகவதர்கள் என்றழைக்கப் பட்டனர். குப்தர்காலத்துக்குப்பின் சமஸ் கிருதம் வட்டார மொழியானது. மேலும் ஆரியர்கள் மதச்சடங்குகள் செய்து தானம் பெறுவதில் நாட்டம் கொண் டார்கள்.

கோவில்களும் , திராவிடர்களும்:

திராவிட நாகரிகத்தினை பிரதி பலிப்பவை கோவில்களாகும். கோ என்றால் அரசனை அல்லது இறை வனைக் குறிக்கும். அரசனும், இறை வனும் வசிக்கும் இடம் நகர். நகர் என்றால் கோவில் என்ற ஒருபொருள் உண்டு. நாகரிகம் வளர்ச்சி அடைந்த போது கோவில் நகரங்கள் தோன்றின. நகரத்தை மட்டும் எல்லையாகக் கொண்ட நகர அரசுகள் (City States) தோன்றின. 

உதாரணம் சிப்பாய் கலகத்தின் போது (1857) முகலாய மன் னன் பகதூர்ஷா டில்லியை மட்டும் ஆண்டார். இந்தியாவில் 56 தேசங்கள் இருந்ததாக சொல்லப்படுவது 56 நகரங்களைக் குறிக்கின்றது. மேலும் புரம் என்றால் கோட்டை என்று பெயர். இவ்வாறு நகர் என்றும் கோவில் என்றும், குடி என்றும், குன்றம் என்றும், ஊர் என்றும், பட்டணம் என்றும் வழங்கப்படும் ஊர்கள் இந்தியாவெங்கும் பரவி இருக்கின்றன. 

இந்த பெயர்கள் அனைத்தும் இந்த உலகத்திற்கு திராவிடரின் நாகரிகத்தைப் பறை சாற்றுகின்றன. இந்த திராவிட நாகரி கத்தின் அடையாளமாக்க, சிந்து சமவெளியில் காணப்படும், நகர நாகரிகம் ஆகும். மற்ற நாட்டினரெல்லாம் கல்லறை கட்டிய காலத்தில் நகர நாகரிகம் படைத்தவன் திராவிடன்.

பழங்காலத்தில் நாவலந் தீவில் (இந்தியாவில்) திகழ்ந்த கட்டடக் கலைகளில் முதன்மையானவை (அ) காந்தாரக்கலை (ஆ) பாரசீகக்கலை (இ) திராவிடக்கலை இவைகளின் சிறப் புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

காந்தாரக் கலை

இந்தக் கலை அலெக்சாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது இந்தியாவில் பரவியது. இதன் விளைவாக இந்தியாவில் இருந்த கனிஷ்கர் போன்ற மன்னர்கள் புத்த விகாரங்கள், புத்தர் சிலைகளை உரு வாக்கினார்கள். காந்தாரக்கலையின் சிறப்புகள் அகன்ற மதிற்சுவர்கள், குறுகிய இடைவெளியில் தூண்கள், துண்களை இணைக்க விட்டங்கள் இந்தக் கலையின் காலம் கி.மு. 650 முதல் 100 கி.மு. வரை.

பாரசீக கட்டடக் கலை:

1526 பாபர் உருவாக்கிய பேரரசு 1540இல் முடிவுற்றது. முகல் (Mughal) என்றால் பாரசீகமொழியில் மங் கோலியரை குறிக்கும். எனவே 1540இல் நாட்டை இழந்த ஹுயூமான் பாரசீகத்தில் தஞ்சம் அடைந்தார். பின் பாரசீக இளவரசியை மணந்து படைதிரட்டி வந்து 1555-இல் டில் லியைப் பிடித்தார். இந்த இடைக் காலத்தில் 1528 இல் கட்டப்பட்ட பாபர் மசூதி யாரிடம் இருந்தது என சிந்திக்கவும். 

ஹுமாயூன் பாரசீகத்தின் துணையால் அமைத்த டில்லி பேரர சில், டில்லியைச் சுற்றி கோட்டைகள், மசூதி அரண்மனைகள் டில்லியை அலங்கரிக்கின்றன. பாரசீக கட்டடக் கலையை ஒட்டி அமைந்தவற்றில் அமெரிக்க குடியரசு தலைவர் பாரக் ஒபாமா கண்டுகளித்த ஹுமாயூன் Tomb. தாஜ்மஹால் முதலியனவாகும். பாரசீக கலை இல்லையேல் டில்லி இல்லை. இந்தக் கால கட்டத்தில் ஆரிய கட்டடக்கலை என்று இருந்ததாக வரலாறு சொல்லவில்லை.

திராவிட கட்டடக் கலை:

இந்தியாவில் குப்தர்கள் காலம் (கி.பி. 320 முதல் 650 வரை) சிறு கோவில்களே கட்டப்பட்டன. இதில் கி.பி. 500 முதல் கி.பி. 800 வரை உருவான குடைவரை கோவில்கள் பிராம்மானியம் அல்லது சமணம் சார்ந்தவை. கி.பி. 800 இல் சாளுக்கியர்கள் வீழ்ந்து ராஷ்டிர கூடர்கள் வந்தார்கள். இவர்கள் திரா விட கட்டடக்கலையை ஊக்குவித்து எல்லோராவில் கைலாசநாதர் கோவிலை கட்டினார்கள்.

சாளுக்கியர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் நாகரா மற்றும் திராவிடக்கலை கலந்த வேசர அமைப்பைக் கொண்டு கோவில்களை வடகர்நாடகாவில் கட் டினார்கள். உதாரணம் பட்டக் கல்லில் உள்ள காசிநாதர்கோவில் (கி.பி. 450 முதல் 650) திராவிடக் கட்ட டக் கலையை வளர்த்தவர்கள் கீழ் வருமாறு:

1. பல்லவர்கள் (600 முதல் 900) மாமல்லபுரத்தில் கல்லில் குடையப் பட்ட இரதங்கள், காஞ்சிபுரம் கைலாச நாதர் கோவில்.

2. சோழர்கள் (900 முதல் 1200) திராவிடக்கலை முழுமை அடைந்தது. தஞ்சையில் கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் கோவில்கள் குறிப்பிடத்தக்கவை.

3. விஜயநகர அரசர்கள் (1350 முதல் 1565) மதுரை, திருவரங்கம் , ஹம்பி, விட்டல்லா கோவில்கள் கட்டினார்கள்.

4. நாயக்கர்கள் (1600 முதல் 1750) இவை தவிர சண்டெல்லா இனத் தவர் எழுப்பிய கஜுராஹா, சோலங் கியர் எழுப்பிய குஜராத் சூரியனார் கோவில்கள் தனித்தன்மை வாய்ந்தவை. மேலும் கூர்ஜரர்கள் சோமநாதபுரத்தில் தங்கத்தால் ஆலயத்தைக் கட்டினார்கள். இந்த ஆலயத்தை கட்டிய பீமதேவ் என்ற மன்னன் கஜினிமுகமதுவுடன் போரிட் டுத் தோற்றான்.