Friday, September 16, 2011

ஆய்வேள் குலம்

களப்பிரர் ஆட்சி என்பது வணிக வர்கத்தவரின் பக்கத்துணையுடன் நடைபெற்ற வேளாண் வர்ணத்தவர் ஆட்சியே எனக் கண்டோம். களப்பிரர் ஆட்சிக்காலத்தில்தான் வைசிய வர்ணம் என்பது வணிக வர்க்கத்தைக் குறிக்கத் தொடங்கிற்று. அக்காலகட்டத்தில் வணிக வர்க்கத்தவர் சிலர், வேளாளர்களுடன் மண உறவு கொண்டிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. மூர்த்தி நாயனாரை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

மதுரையைப் பாண்டிய மன்னன் ஆண்டு கொண்டிருக்கையில் மூர்த்தியார் என்ற வணிகர், ஆலவாய்ச் சிவபிரானுக்குச் சந்தனக் காப்பு செய்து வந்தார். கருநடவேந்தன் ஒருவன் படையெடுத்து வந்து பாண்டியனை வீழ்த்தி மதுரையைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினான். அவன் சைவ சமயத்துக்கு எதிரியாதலால் மதுரைக்குச் சந்தனம் வந்து சேர்கிற வழியை அடைத்து மூர்த்தியாரின் திருப்பணிக்கு இடையூறு செய்தான். மூர்த்தியார் மனந்தளர்ந்து விடாமல் தமது முன்கையையே சந்தனம் தேய்க்கும் வட்டப்பாறையில் தேய்த்துத் தமது நிணங்கலந்த குருதியையே (செஞ்சந்தனமாக) படைத்தார். அந்நிலையில் கருநடவேந்தன் இறந்துபட, அமைச்சர்கள் உரிய அரசனைத் தேர்வு செய்வதற்காகப் பட்டத்து யானையைக் கண்ணைக்கட்டி அனுப்பினர். அந்த யானை மூர்த்தியாரின் முன்னர் வந்து பணிந்து அவரைச் சுமந்து சென்று அரசராக்கியது. இது பெரியபுராணம் (மும்மையால் உலகாண்டசருக்கம், பா1-48) கூறும் கதை. வேளாளர் சமூக ஆவணங்கள் மூர்த்தியாரைத் தங்கள் குலத்தவராகக் குறிப்பிடுகின்றன.1 சைவ நாயன்மார்களுள் வணிகர் சாதிப்பிரிவினராகக் குறிப்பிடப்படும் ஐவர், அமர்நீதியார், காரைக்காலம்மையார், கலிக்கம்பர், இயற்பகையார், மூர்த்தியார் ஆகியோராவர். இவர்களுள் மூர்த்தியாரை மட்டும் வேளாளர்கள் தமது குல முன்னோராகக் குறிப்பிடுவது, கருநட (களப்பிர) அரச வம்சத்தவருடன் அவருக்கிருந்த மண உறவின் காரணமாகவே எனத் தோன்றுகிறது. நாட்டுக்கோட்டை நகரத்தார் குறித்த பிற்காலக் கதைகள், அவர்கள் காராளர் குலப் பெண்டிரைத் திருமணம் புரிந்ததாகக் குறிப்பிடுகின்றன என்பதும் கவனத்துக்குரியது.
சங்ககால வேளிர் குலத்தவர், அரச வர்ணத்தவராக அங்கீகரிக்கப்பட்டிருந்தமையால் அவர்கள் வணிகர் வேளாளர் கூட்டணியில் இடம் பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை எனலாம். வேளிர் குலத்தைச் சேர்ந்தவராகக் கருதப்படும் இடங்கழியார் என்ற சைவநாயன்மாரின் வரலாற்றையும் அவரது வம்சத்தாரின் வரலாற்றையும் ஆராய்ந்தால் இந்நிகழ்வு குறித்த தெளிவு ஏற்படும். கி.பி.14ஆம் நூற்றாண்டில் சைவ நாயன்மார்களைச் சாதிவாரியாகப் பட்டியலிடுகிற உமாபதி சிவாச்சாரியார் பல்லவ அரசர்களான ஐயடிகள் (பஞ்சபாதசிம்மன்), கழற்சிங்கன் (இராஜசிம்மன்) ஆகியோரையும், களப்பிர அரசரான கூற்றுவநாயனாரையும், மலையமான் (அல்லது மிலாடர்) குலத்தைச் சேர்ந்த மெய்ப்பொருளாரையும், நரசிங்கமுனையரையரையும் குறுநில மன்னர்களாக வகைப்படுத்துகிறார். அதே வேளையில் கோச்செங்கட்சோழர், புகழ்ச்சோழர், நெடுமாறன், மானி (நெடுமாறனின் மனைவியும் சோழர்குலத்தவருமான மங்கையர்க்கரசி), சேரமான் பெருமாள், இடங்கழியார் ஆகியவர்களை முடிமன்னர்களாகப் பட்டியலிடுகிறார்.2 கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் குறுநில மன்னர் என மக்களால் அறியப்பட்ட சாதியொன்று தமிழகத்தில் இருந்ததா, களப்பிர வம்சத்தவரும் அச்சாதியினராகவே கருதப்பட்டார்களா என்ற கேள்விகளைப் பிறகு பரிசீலிப்போம். தமிழக வேந்தர்களான முடியுடை மூவேந்தர் மரபினரையே அதாவது பூர்விக அரசவர்ணத்தவரையே முடிமன்னர் சாதியினராக உமாபதி சிவாச்சாரியார் கருதியுள்ளார் என்பது இப்பட்டியலால் தெளிவாகிறது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள இடங்கழியாரின் வரலாற்றை இப்போது ஆராய்வோம்.
சுந்தரரின் திருத்தொண்டத் தொகை (பா.9). ‘‘மடல் சூழ்ந்ததார் நம்பி இடங்கழி” என்று மட்டுமே குறிப்பிடுகிறது. நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி (பா.65) பின்வருமாறு விவரிக்கிறது.
சிங்கத்துருவனைச் செற்றவன் சிற்றம்பல முகடு
கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன் குலமுதலொன்
திங்கட் சடையர் தமரது என் செல்வம் எனப்பறைபோக்கு
எங்கட்கிறைவன் இருக்குவேளூர்மன் இடங்கழியே
‘‘இருக்கு வேளூரின் மன்னனாகிய இடங்கழி, சிங்கத்து உருவனை வென்றவன், தில்லைச் சிற்றம்பலத்தைக் கொங்கு நாட்டுத் தங்கத்தால் வேய்ந்த ஆதித்த சோழனின் குல முதல்வன்; தமது செல்வமெல்லாம் சிவனடியார்க்கு உரியது எனப்பறை அறைவித்தவன்” என்பது இதன் பொருளாகும். சிங்கத்து உருவன் என்பது கங்க அரசனாகிய மூன்றாம் மாதவர்மன் என்கிற சிம்மவர்மன் (கி.பி.465- 500) எனக் கொண்டால் இடங்கழியார் ஐந்தாம் நூற்றாண்டின்  இறுதிப்பகுதியைச் சேர்ந்தவர் எனலாம்.
இருக்குவேளூர் என்பது கணம்புல்லநாயனார் பிறந்த ஊராகிய இருக்குவேளூரைக் குறிப்பதாகக் கொள்ளாமல், இருங்கோவேளிரின் தலைநகராக இருந்த கோனாட்டு (புதுக்கோட்டை மாவட்டம்)க் கொடும்பாளூரைக் குறிப்பதாகக் கொண்டு சேக்கிழார் தமது பெரிய புராணத்தில் (கடல் சூழ்ந்த சருக்கம், பா.15,16) பின்வருமாறு எழுதியுள்ளார்.
குருகுறங்கும் கேனாட்டுக் கொடிநகரம் கொடும்பாளூர்
அந்நகரத்தினிலிருக்கும் வேளிர் குலத்து அரசளித்து
மன்னிய பொன்னம்பலத்து மணிமுகட்டின் பாக்கொங்கின்
மன்னுதுலைப் பசும் பொன்னாற் பயில்பிழம்பாம் மிசையணிந்த
பொன்னெடுந்தோள் ஆதித்தன் புகழ்மரபிற் குடி முதலோர்
‘‘வேளிர்குலத்து அரசளித்து” என்று சேக்கிழார் கூறுவதன் பொருள் என்ன, கோனாட்டின் தலைநகரான கொடும்பாளூரிலிருக்கும் வேளிர் குலத்தவர்க்கு அரசுரிமை அளித்தவர் இடங்கழியார் என்றோ, வேளிர் குலத்தவர் சார்பான அரசாட்சி செய்தவர் என்றோ இதற்குப் பொருள் கொள்ளலாம். கி.பி.20 ஆம் நூற்றாண்டில் கொம்பாளூர் இருங்கோவேளிர் மரபினர், சோழ அரச குலத்தவருடன் நெருங்கிய மண உறவு கொண்டிருந்தனர் என்பது கொடும்பாளூர் மூவர் கோயிற் கல்வெட்டுகளால் தெரியவருகிறது. அனுபமா (ஒப்பிலாள்) என்ற பெயருடைய சோழ இளவரசி, சமராபிராமன் என்ற யது குல அரசனை மணந்து யது வம்சக் குலக்கொடி ஆயினாள் என்றும் அவர்களுக்கு மின்னாமளா (மின்னா மழை) என்ற பெயருடைய பூதிவிக்ரம கேசரி பிறந்தானென்னும் அவனே இக்கோயிலைக் கட்டுவித்தான் என்றும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.3
வேளிர் குலத்தவரை குறிப்பாக இருங்கோவேள் மரபினரை – யது வம்சத்தார் எனக் குறிப்பிடுவது புறநானூற்றுப் பாடலில் (பா.201) பதிவாகியுள்ளது. இவர்கள் துவாரகையிலிருந்து அகத்தியருடன் தென்னாட்டு வந்தடைந்தவர்கள் எனத் தொல்காப்பியப் பாயிர உரையிலும், தொல்காப்பிய அகத்திணையியல் நூற்பா 32க்கான உரையிலும் நச்சினார்க்கினியரால் குறிப்பிடப்பட்டுள்ளது.4 எனவே கொடும்பாளூர்க் கல்வெட்டு குறிப்பிடும் புராண மரபு, புதிதாக உருவாக்கிக் கொள்ளப்பட்ட மரபன்று. இத்தகைய பழமையான மரபினருடன் சோழர் குலத்தவர் மண உறவு கொள்வதும், அம்மரபினர் சார்பாக ஆட்சி செய்வதும் புரிந்துகொள்ளத்தக்கனவே.
கி.பி. 848 இல் தஞ்சையை முத்தரையர்களிடமிருந்து விஜயாலய சோழன் கைப்பற்றினான். அப்போர் வெற்றியில் கொடும்பாளூர் இருக்குவேளிரின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்கும் என நாம் அனுமானிக்கலாம். விஜயாலய சோழன்தான் பரகேசரி, இராஜகேசரி என்ற பட்டப்பெயர்களைச் சோழ அரசர்கள் அடுத்தடுத்துச் சூடிக் கொள்ளும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தவன். பரகேசரி இராஜகேசரி என்ற பட்டம் புனைந்த சோழ அரசர்களுக்கு முன்னர் சுராதிராசன் என்ற பெயருடைய சோழன் இருந்தான் எனக் கலிங்கத்துப்பரணி (தாழிசை 191) கூறும். இந்தச் சுராதிராசனே விஜயாலய சோழனின் தகப்பன் என்றும், இடங்கழியாரின் வம்சத்தவன் என்றும், கொடும்பாளூர் ஏரிக்கரையில் வாழ்ந்தவன் என்றும் ஒரு பழங்கதை உண்டு.5 சோழர் செப்பேடுகள் குறிப்பிடும் வம்சாவளிப்பட்டியலுடன் இக்கதை பொருந்தி வரவில்லை யெனினும், கொடும்பாளூர் இருங்கோ வேள் மரபினர் சோழர் வரலாற்றில் பெற்றிருந்த முதன்மையை இக்கதை உணர்த்துகிறது.
கொடும்பாளூர் இருக்குவேளிர் வம்சத்தைச் சேர்ந்த மகிமாலயன் என்பவன், பராந்தக சோழனால் (கி.பி. 907-953) பராந்தக வீரசோழன் என்ற பட்டப் பெயர் வழங்கப் பட்டுக் கொங்கு நாட்டுச் சிற்றரசனாக நியமிக்கப் பட்டான். இவன் பூதி விக்ரம கேசரியின் மகன் எனக் கருதப்படுகிறது. இவனது வம்சத்தவர் ‘‘கோனாட்டார் என்ற பெயரில் மூன்று நூற்றாண்டுகள் கொங்கு நாட்டை ஆண்டனர்.6 இவர்கள் கொங்குச் சோழர் என்றும் 13 ஆம் நூற்றாண்டில் கொங்குப் பாண்டியர் என்றும் அறியப்படுவர். கோனாட்டு இருங்கோவேள் மரபினர் இவ்வாறு நியமிக்கப் பட்டதன் பின்னணி என்ன என்றும், இவ்வாறு நியமிக்கப்பட்ட பின்னர் நிகழ்ந்த அரசியல் சமூகவியல் வரலாற்று மாற்றங்கள் என்ன என்றும் ஆராய்வோம்.
பராந்தக சோழனின் தந்தை ஆதித்த சோழன், கொங்கு நாட்டு வேட்டுவ அரசர்களை வென்று, தழைக்காட்டு நகரைக் கங்கர்களிடமிருந்து கைப்பற்றினான்.7 ஆனால், கங்கர்களை முற்றிலும் வேரறுத்து விடவில்லை. கங்க அரச வம்சத்தவனாகக் கருதத்தக்க விக்கியண்ணன் என்பவனுக்குச் செம்பியன் தமிழவேள் என்று பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்தான்.8 ஆதித்தசோழனின் காலத்திலேயே கொங்கு நாட்டைச் சேரர் குலச் சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர். இவர்கள் சந்திராதித்த குலத்தவர் எனத் தம்மை விளம்பரப் படுத்திக் கொண்டனர். இச்சிற்றரச வம்சத்தவரை, ஆதித்த சோழனுடன் படைநடத்திச் சென்ற பூதி விக்ரம கேசரி வெற்றி கொண்டான் எனத் தோன்றுகிறது. மேற்குறித்த கொடும்பாளூர் மூவர் கோயிற் கல்வெட்டில் ‘‘வஞ்சிவேள்” என்பவனை வென்றதாக விக்ரம கேசரி பெருமிதத்துடன் கூறிக் கொள்கிறான்9. வஞ்சிவேள் என்பது மேற்குறித்த சந்திராதித்த குலச் சிற்றரசர்களையே எனக் கொள்ளலாம். ஆதித்த சோழன், வேளிர்குலத்தவனல்லாத ஒருவனுக்குச் செம்பியன் தமிழவேள் என்ற பட்டம் வழங்கியதன் எதிர்விளைவாக – அல்லது பக்கவிளைவாகக் கொடும்பாளூர் வேளிர் மரபினரும் வஞ்சிவேள் மரபினரும் தமக்குள் உடன்பாடும் உறவும் கொண்டு கொங்குநாட்டை ஆளவும், கங்கர்களின் ஊடுருவலைத் தடுக்கும் முயற்சியிலிறங்கவும் தொடங்கியிருக்கவேண்டும். இது, முதற் பராந்தக சோழனின் ஆதரவுடன் நிகழ்ந்திருக்கவேண்டும்.
கொங்குச் சேரர் குலச் சிற்றரசர்கள், மூலபல கொற்றவாள் எழுநூற்றுவர் என்ற அரசகுல வாட்படை வீரர்களைப் பராமரித்து வந்தனர்.10 கோனாட்டு இருக்குவேள் மரபினரின் ஆட்சியில் இப்படை ‘‘பராந்தகக் கொங்கவாளர்” எனப் பெயர் மாற்றம் பெற்றது.11 முதல் இராஜராஜசோழனின் ஆட்சிக்காலத்தில் சோழநாட்டிலிருந்த இப்படைப்பிரிவினர் ‘‘உடையார் படைக்கொங்கவாளர்” என அழைக்கப்பட்டனர். பிரம்மதேய மகாசபையாரையே தண்டிக்கின்ற ஆற்றல் படைத்த படைப்பிரிவாக இது இருந்ததெனத் திருவிடைமருதூர்க் கல்வெட்டால் தெரியவருகிறது.12 இம்மூலப்படையினரின் ஆதிக்கமும், கோனாட்டு ஆட்சியாளர்களின் அதிகாரமும் 13ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மறைந்துவிட்டாலும், இவ்வரலாற்றிற்குச் சான்றோர் (நாடார்) குலத்தவர் உரிமை பாராட்டுகின்றனர். பின்வரும் ஆதாரங்கள் இது தொடர்பாகப் பரிசீலிக்கத் தக்கவை.
1) கொங்கு நாட்டுத் திருமுருகன் பூண்டி (ஸ்கந்தபுரி)க் கோயிலின் குருத்துவ மிராசுதாரராக இருக்கின்ற சிவப் பிராம்மணர்கள், சான்றோர் மடத்தின் குல குருவாகவும் உள்ளனர். அவர்கள் வசமுள்ள, கி.பி. 17 ஆம் நூற்றாண்டுக்குரிய சான்றோர் சமூகச் செப்பேட்டில், “கோனாடன்” என்ற பிரிவைச் சேர்ந்த சான்றோர் சாதியினர் குறிப்பிடப்படுகின்றனர்.13 மட்டுமின்றி, கொங்குச் சான்றார்களுள் மூத்த காணியாளரான “பேரறமுடையார்” பிரிவைச் சேர்ந்தவர்களாக இக்கோனாடர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.
2) கோயம்புத்தூர் நகரின் முதன்மையான கோயில்களுள் ஒன்றான கோனியம்மன் (கோனாடியம்மன்?)  கோயில், கோன மூப்பன் எனப்பட்ட சான்றோர் குலத் தலைமகனால் கட்டுவிக்கப் பட்டதென நம்பப்படுகிறது. இவை கோனாட்டு அரச வம்சத் தொடர்புகளை உணர்த்தும்.
3) சான்றோர் சமூகத்தவர் எழுநூற்றவர் வம்சத்தைச் சேர்ந்த வாள்வீரர்கள் என்ற வரலாற்றைச் செய்தி, கி.பி. 17 ஆம் நூற்றாண்டுக்குரிய கொங்கு நாட்டு அவல் பூந்துறைச் செப்பேட்டிலும் (பக்கம் 2, வரி 53), சோழ நாட்டுத் திருவிடைமருதூர்ச் செப்பேட்டிலும்(பக்கம் 2, வரி 47-48) குறிப்பிடப்பட்டுள்ளது.14
வேளிர் குலத்தவனல்லாத – கங்கர் குலத்தவனாகக் கருதத்தக்க ஒருவனுக்கு ஆதித்த சோழனால் “வேள்” பட்டம் வழங்கப்பட்டமை குறித்துக் கண்டோம். இதன் பின்னர் சோழ அரசின் அதிகார அடுக்கில் இடம் பெறத் தொடங்கிய பல சாதியினருக்கும் வேள், வேளான், மூவேந்த வேளான் போன்ற பட்டங்கள் வழங்கப்படலாயின. விவசாய விரிவாக்கத்தின் உடன் நிகழ்ச்சியாக இத்தகைய பட்டங்கள் வழங்கப்படுவது அமைந்தது. நில வருவாய் நிர்வாகக் கட்டமைப்பு உருவாகி, சித்திரமேழிப் பெரிய நாட்டார் என்ற, வேளாளர் தலைமையிலான விவசாயிகள் நிலவுடைமையாளர்கள் கட்டமைப்பு வடிவெடுக்க இது வகை செய்தது. கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில், சித்திரமேழி சாசிருவரு (ஆயிரவர்) என்ற அமைப்பு உருவானமை போன்றே ஹொய்சளர் என்ற புதிய அரச வம்சமும் உருவாயிற்று. ஹொய்சள அரசன் விஷ்ணுவர்த்தனனின் கி.பி. 1117 ஆம் ஆண்டுக்குரிய பேளூர்ச் செப்பேடு, ஹொய்சளர்கள் யது குலத்தார் என்று உரிமை கொண்டாடுகிறது.15 இவர்கள் சாளுக்கியருடன் கொண்டிருந்த மண உறவினால் இத்தகுதியை அடைந்ததாகக் கருதியிருக்கலாம். அதே வேளையில் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில்  வெகுஜன  இயக்கங்களாக உருவாகி வந்த வீரசைவம், இராமானுஜரின் வைணவநெறி ஆகியவற்றின் தாக்கத்தாலும், உலகுக்கு உண்டியளித்து உயிர் கொடுக்கும் விவசாயிகளின் பால் காட்டிய பரிந்துணர்வாலும், ஹொய்சளர் அரசே வேளாளர்களின் அரசு என்பது போன்ற தோற்றம் உருவாயிற்று.16 சோழர் அரசியலிலும் அரச குடும்ப உறவுகளிலும் ஹொய்சளரின் ஊடுருவல் அதிகரித்தது.17 சோழர் அரசியலில் வேளாளர் குலத்தவரின் பங்களிப்பு அதிகரித்ததன் விளைவாகச் சித்திர மேழிப் பெரிய நாட்டாரின் அரசியல் வலிமையும் பெருகிற்று. வேள், அரசு, காவிதி போன்ற பட்டங்கள் பெரிய நாட்டாரைச் சார்ந்த பல்வேறு சாதியினரின் பரம்பரைப் பட்டங்களாயின. இந்நிலை முற்றியதன் விளைவாகவே பணி மக்கள் இப்பட்டங்களைப் புனைந்து கொள்வதைத் தடுக்கும் வகையில் அரசாணை வெளியிடநேர்ந்தது.18
வேள் என்பது அரச வர்ணத்தவர்க்குரிய பட்டமாக முற்காலத்தில் இருந்ததைப் போலக் “காவிதி” என்பதும் அரச குலப்பட்டமாக இருந்ததற்குச் சான்று உண்டா என்ற வினா எழுவது இயல்பு. காவிதி என்பது மந்திரிகளுக்குரிய பட்டப்பெயர் எனச் சற்று முற்பட்ட நிகண்டு நூலான பிங்கல நிகண்டு கூற, “கணக்கர் சாதிப் பெயர்” எனக் கி.பி.13 ஆம் நூற்றாண்டைய நூலான சூளாமணி நிகண்டு கூறுகிறது. கணக்கர் சாதி என்பது வட இந்தியாவில் “கா(ர்)யஸ்தர்” என வழங்கப்படுகிறது.இச்சாதியினர் பிரம்ம சத்திரியர் என்றும் வழங்கப்பட்டனர். தமிழகத்தில் கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிராம்மணர்களுக்கு அடுத்த நிலையிலும், வியாபாரி சாதியினர்க்கு சற்று மேம் பட்ட நிலையிலும் கணக்கர் சாதி இருந்தது என்ற உண்மை உத்தரமேரூரிலுள்ள முதல் இராஜராஜனின் கல்வெட்டால் தெரிய வருகிறது.19 இச்சாதியினர், கி.பி.13 ஆம் நூற்றாண்டு வரை கணக்கந்தைகள் (கணக்குத் தந்தைகள்) என்று அழைக்கப்பட்டனர் என்றும், சித்திர மேழிப் பெரிய நாட்டாரின் கணக்கப் பிள்ளைகள் (கர்ணீக வேளாளர்) எழுச்சியால் இவர்களின் ஆதிக்கம் வீழ்ந்ததென்றும் அனுமானிக்க முடிகிறது.20 காவிதி என்ற சாதிப் பிரிவு, சான்றோர் சமூகத்தின் ஒரு பிரிவு என்று “வலங்கைமாலை” வில்லுப்பாட்டு இலக்கியத்தால் அறியமுடிகிறது. எனவே வேள் என்ற பட்டம் போன்றே காவிதி என்ற கணக்கர் பட்டமும் அரச குலப்பட்டமாகவே கி.பி.10 ஆம் நூற்றாண்டு வரையிலும் இருந்துள்ளதெனக் கொள்ளலாம்.21
கொங்கு நாட்டைப் பொறுத்த வரை, கோனாட்டு வேளிர் குடியேற்றத்தின் போது அவர்களின் பணி மக்களாகவும் சீதன வேளாட்டியர் மரபினராகவும் குடியேறிய பலர் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் உரிமையும் அந்தஸ்தும் பெற்றனர். கொங்குச் சேரன் ஒருவன் சோழ இளவரசியைத் திருமணம் முடித்தபோது இவ்வாறு 8000 வேளாளர்கள் உறையூர் (திருச்சிராப்பள்ளி)ப் பகுதியிலிருந்து குடியேறினர் எனப் பழங்கதை ஒன்று வழங்குகிறது.22 அத்தகையோர், முன்னரே கங்க அரசர் ஆளுகையின் போது பெருங்குடிகளாக உருவாகியிருந்த வேளாளர்களின் துணையையும் சித்திரமேழிப் பெரிய நாட்டின் ஆதரவையும் பெற்றுக் கி.பி. 12-13 ஆம் நூற்றாண்டுகளில் உரிமை எய்தியிருக்க வேண்டும். ஹொய்சளர் ஆட்சியால் இந்நிகழ்வுப் போக்கு வேகமடைந்தது.23 வேளாளர்கள் நிலை கொங்கு மண்டலத்தில் மட்டுமின்றித் தமிழகம் முழுவதும் எழுச்சி பெற்றது இந்தப் பின்னணியில்தான்.
இப்போதைய நிலையில், கொங்கு வேளாளர்கள் குறித்த ஆய்வில் இரண்டு விடயங்கள் குறித்த ஆய்வுச் சிக்கல் உள்ளது. ஒன்று, “கொங்கு வேளிர்” எனப்பட்ட புலவர் வேளாளர் குலத்தவராகக் கருதப்பட இயலுமா என்பது பற்றியது. அடுத்தது,  கங்க அரச வம்சத்தவர், சோழர், பாண்டியர் போன்ற பேரரசர்களுடன் மண உறவு கொண்டதன் மூலம் சத்திரிய வர்ண அந்தஸ்தை முயன்றனரா; வேளிர் குலத்தவருடன் கங்கர்களுக்கிருந்த உறவு எத்தகையது என்பது. இவற்றுள் முதலாவது ஆய்வுச் சிக்கல் கொங்கு வேள் குறித்தது.  கங்க அரசன் துர்விநீதன் இயற்றிய நூலை முதல் நூலாகக் கொண்டு கொங்குவேள் “பெருங்கதை”யை எழுதியிருப்பினும், அவர் வேளிர் குலத்தவராக இருக்கவே வாய்ப்புள்ளது. கொங்குவேள், குறுப்பு நாட்டு விசயமங்கலத்தைச் சேர்ந்தவர் என்பது அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் இருளப் பட்டியில் கண்டறிப்பட்ட கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டைய நடுகல், “விசையமங்கலம் ஆண்ட விண்ணப் பேரேனாதி” என்பவனுக்கு எடுக்கப் பட்டதாகும்.24  இந்நடுகல்லில் குறிப்பிடப்படும் விசையமங்கலம், குறுப்பு நாட்டு விசயமங்கலமாக இருக்கக் கூடும் எனில் அவ்வூரின் ஆட்சியாளனான விண்ணப் பேரேனாதியின் வம்சத்தவரே கி.பி.6-7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான கொங்கு வேள் எனலாம். கொங்கன், ஏனாதி என்ற பிரிவுகள் சான்றோர் சாதியில் உள்ளன எனத் திருமுருகன் பூண்டிச் செப்பேட்டால் அறிய முடிகிறது.25 எனவே கொங்கு வேள், அரச வர்ணத்தவராக இருக்கக் கூடும்.
இரண்டாவது ஆய்வுச்சிக்கல் கங்கர்கள் வேளிர்களுடனும் மூவேந்தர் மரபினருடனும் கொண்ட மண உறவு பற்றியதாகும். பாண்டியர்கள் கங்கர்களுடன் கொண்ட மண உறவு, சம்பந்த வகை மண உறவு அல்லது பெண்ணைக் கவர்ந்து வந்து மண முடிக்கும் ராக்ஷஸ முறை உறவே எனத் தோன்றுகிறது. எடுத்துக்காட்டாகக் கங்க அரசன் ஸ்ரீபுருஷன் மகள் பூசுந்தரியை இராஜ சிம்ம பாண்டியரின் அதிகாரி மாறங்காரி, கவர்ந்து கொணர்ந்து பாண்டிய மன்னனுக்கு மண முடித்து வைத்தான் எனத் தெரிகிறது.26
எனவே இச்சிக்கல் குறித்து விரிவாக விவாதிப்பதற்கான தரவுகள் தற்போதைய நிலையில் இல்லையெனத் தோன்றுகிறது. மட்டுமின்றி, கி.பி.13-14 ஆம் நூற்றாண்டுகளில் அதுவரை தமிழகத்தின் சிற்றரசர் சாதியினராக அல்லது சத்திரிய வர்ணத்தின் கீழ் அடுக்குகளைச் சேர்ந்தோராகத் தம்மை அறிவித்து வந்த பல மக்கட்குழுவினர், சித்திர மேழிப் பெரிய நாட்டார் கூட்டணியில் இணைந்ததன் மூலம் வேளாளர் குல அடையாளத்தை ஏற்றனர். அந்நிலையில் மாகத சோழர் எனத் தம்மை அடையாளம் காட்டிக்கொண்ட மறக்குல அகம்படியருடன் அதாவது மாவலி வாணர் வம்சத்தவருடன் கங்கர் குலத்தவரும் சோழ கங்கர் என்ற பட்டம் புனைந்து கொண்ட சாதிப் பிரிவினரும் இணைந்தனர் எனத் தோன்றுகிறது. கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாணாதிராயர் வம்சத்தவர் “கங்கர் குலோத்பவன்” (கங்க குலத்தில் உதித்தவன்) என்றும் “கங்கர் குல உத்தமன்” என்றும் தம்மைப் பறை சாற்றிக் கொண்டனர்.27 இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில், சிற்றரசர் குலத்தவர் என ஐவர், சேக்கிழார் நாயனார் புராணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள செய்தி குறிப்பிடப் பட்டுள்ளது. அப்பட்டியலில் பல்லவ அரசர் இருவர் இடம் பெற்றுள்ளனர். தற்போதைய நிலையில் பல்லவ அரச குலத்துக்கு உரிமை கொண்டாடும் சாதியினர் இருவர் உள்ளனர். அவர்களுள் முக்கண்டி காடுவெட்டி எனப்பட்ட நுளம்ப பல்லவர்கள் எனச் சான்றோர் குலப் பிரிவினர் சிலர் உரிமை கொண்டாடுகின்றனர். காடவர் குலப் பல்லவர் வாரிசுரிமையைத் தற்காலத்தில் கோருபவர்கள் பள்ளி குலக் காடவர்(வன்யர்)களே. பள்ளி குலத்தாரும், கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் சித்திரமேழிப் பெரிய நாட்டார் கூட்டணியில் இணைந்து விட்டனர்.28 இதன் பின்னர் தமிழ் மரபு என்பதே வேளாளர்களால் நிர்ணயிக்கப்படுவதுதான் என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டு நிலைப்பட்டு விட்டது. வேளாளர் குலமே “கங்கை குலம்” என்ற பெயரைப் பெற்று விட்டது.
இனி, தென்கோடித் தமிழகத்திலும் கேரளமாநிலத்தின் தென்பகுதியிலும் கி.பி. 9-10 ஆம் நூற்றாண்டுகளில் நிலவிய ஆய்வேள் மரபினர் ஆட்சி, அப்பகுதியில் நிலவிய சமூகச் சூழல், மாற்றங்கள் ஆகியன குறித்து ஆராய்வோம். ஆய்வேள் வம்சத்தவர் சங்க காலத்தில் கோட்டாற்றை (நாகர்கோவில்)த் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தோராவர். இவர்கள் ஆயர் வம்சத்தில் தோன்றி29 வேள் பட்டம் புனைந்து தம்மை யது குலத்தோராகவும், அரச வர்ணத்தவராகவும் அறிவித்துக் கொண்டவர்கள் எனலாம். இவ்வம்சத்தைச் சேர்ந்த கோக்கருநந்தடக்கன், விக்கிரமாதித்த வரகுணன் ஆகிய மன்னர்களின் கி.பி. 9 ஆம் நூற்றாண்டைய செப்பேடுகள் 4 கண்டறியப்பட்டுள்ளன. அச்செப்பேடுகளில் அவர்கள் யது குலத்தவர் என்றும் மகாபலியைத்து வம்சம் செய்த திருமாலின் (திரிவிக்கிரமனின்) வம்சத்தவர்கள் என்றும் பெருமிதத்துடன் கூறிக்கொள்கின்றனர்.30 பூர்வ குடியினரான மாவலி வம்சத்து மறக்குல அகம்படியர்களினின்றும் (நாயர் சாதியினரிடமிருந்தும்) தங்களை வேறுபடுத்திக் காட்டிக் கொள்வதற்காக இவ்வாறு தெளிவுபடக் கூறியிருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது. அதே வேளையில் தாங்களும் யாகம் செய்யும் அதிகாரம் படைத்த வர்ணப் பிரிவினரே என்பதை உணர்த்தும் வகையில், தங்கள் குல முன்னோர்கள் செய்வித்த யாகங்களின் பெருமையை  ஒரு செப்பேட்டில் குறிப்பிடுகின்றனர். இப்புராணச் செய்தியைக் குறிப்பிடும் யாக மரபை முற்றிலும் புறக்கணித்த புத்த சமயச் சார்புடைய செப்பேடு என்பது குறிப்பிடத்தக்கது.31
ஆய்மன்னன் கோக்கருநந்தடக்கனின் புகழ் பெற்ற பார்த்திவ சேகரபும் செப்பேட்டிற்கு ஆணத்தியாக (ஆணையை நிறைவேற்றுபவனாக) இருந்தவன் தெங்கநாட்டு வெண்ணீர் வெள்ளாளன் தெங்கநாடு கிழவன் சாத்தமுருகன் ஆவான்.32 இச்செப்பேடு வழங்கிய கோக்கருநந்தடக்கனின் மகன் விக்கிரமாதித்த வரகுணனுக்குச் சாத்தமுருகன் மகள் முருகஞ்சேந்தி மண முடித்துக் கொடுக்கப்பட்டு அவள் “ஆய்குல மாதேவி” என்ற பட்டப் பெயரால் அழைக்கப்பட்டாள்.33 வேளாளர் குலத்தவர், வேளிர் குலத்தவர்க்குப் பெண் கொடுக்கும் வழக்கம் இருந்தது என்பதற்கும், மணப்பெண் புகுந்த வீட்டாரின் கோத்திரத்தை ஏற்கும் மரபே அவ்வுறவிலும் பின்பற்றப் பட்டதென்பதற்கும் இது சான்றாகும். ஆனால் இது மலைநாட்டில் மட்டுமே பின்பற்றப்பட்ட வழக்கம் என்றும், தொண்டை மண்டல வேளாளர்களின் உறவால் இவ்வழக்கம் உருவாயிற்று என்றும் தோன்றுகின்றன. இவ்வாறு நாம் ஊகிப்பதற்குப் பெரிய புராணத்தில் காணப்படுடம் ஒரு குறிப்பு ஆதாரமாகிறது;
“சேணுலாவு சீர்ச் சேரனார் திருமலைநாட்டு
வாள்நிலாவு பூண் வயவர்கள் மைத்துனக் கேண்மை
பேண நீடிய முறையது பெருந் தொண்டைநாடு”
(பெரிய -மும்மையால் உலகாண்டசருக்கம், பா.114)
தொண்டை நாட்டில் நிலவிய புத்தசமயம், பாஞ்சராத்ர வைணவம் ஆகியவற்றின் தாக்கத்தாலும் இத்தகைய மண உறவுகள் நிகழத் தொடங்கியிருக்கலாம். “மேற்குறித்த புத்த சமயச் சார்புடைய செப்பேடு ஸ்ரீமூலவாச லோகநாதர் எனப்பட்ட போதி சத்வ அவலோகி தேஸ்வரர் பள்ளிக்கு வழங்கப்பட்ட கொடை குறித்ததாகும். பார்த்திவசேகர புரத்தில் சட்டக் கல்வி கற்பிக்கின்ற சாலை ஒன்று ஏற்படுத்தப்பட்ட செய்தியைக் கூறும் செப்பேடு, அச்சாலையை யொட்டி அமைந்திருந்த திருமால் கோயில் குறித்தும், அத்திருமால் கோயிலில் நிகழ்ந்த மாசி மகத் திருவிழா குறித்தும் பேசுகிறது.34
மேற்குறித்த 4 செப்பேடுகளும் ஆய்வேள் நாட்டில் சமகாலத்தில் கல்வெட்டுகள் பொறிக்கப்படுவதற்குப் பயன்படுத்தப்பட்ட வட்டெழுத்தில் எழுதப்படாமல் பல்லவர்களின் அரசவை எழுத்தாக அங்கீகரிக்கப் பட்டிருந்த தமிழ் எழுத்தில் எழுதப்பட்டுள்ளன. பார்த்திவ சேகரபுரம் சாலையில் தரை ராஜ்ய வயவஹாரத்திற்கு (மூவேந்தர் ஆட்சிப் பகுதிகளின் நிர்வாகத்திற்கு) உரிய கல்வியைக் கற்ற மாணவர்கள் தமிழ் எழுத்துப் பயிற்சி உடையவர்களாக இருந்தார்கள் என நாம் அனுமானிக்க முடிகிறது. மட்டுமின்றி, தமிழ் எழுத்துகளைச் சரளமாகப் பொறிப்பதற்குக் கற்றிருந்த அரசவை எழுத்தர்கள்  ஆய்வேளிரின் பணியில் இருந்தனர் என்பதையும் உணர முடிகிறது. திருப்பறப்புச் செப்பேட்டைப் பொறித்தவன் விழிஞம் என்ற துறைமுக நகரைச் சேர்ந்த ஸ்ரீவல்லபப் பெரும் பணைகனாயின அவியலந்தடக்கன் என்ற விஸ்வகர்ம ஆசார்யன் ஆவான்.35 விழிஞம் துறைமுகம், தொண்டை நாட்டுத் துறைமுகங்களுடனும் இலங்கையுடனும் நெருங்கிய வணிகத் தொடர்புடைய துறைமுகம். எனவே இலங்கையில் செல்வாக்குடனிருந்த புத்த சமயத்தின் தாக்கமும் விழிஞம் துறைமுகத்தில் நிலவியிருக்க வேண்டும். தொண்டை மண்டலக் கடற்கரைத் தொடர்பை உணர்த்தும் வகையில், பார்த்திவ சேகரபுரம் செப்பேட்டில் ஒப்பமிட்ட ஒருவனின் பெயர் அமைந்துள்ளது.
அப்பெயர்,
“திரையன் ஓமாயநாடு  கிழவனான சிங்கக்
குன்றப் போழன்” என்பதாகும். 36
இக்கால கட்டத்தில் தொண்டை மண்டலத்தில் புத்த சமயம் செல்வாக்குடன் திகழவில்லை யெனினும், சோழ நாட்டு நாகப்பட்டினம் முதன்மையான புத்த சமயத்தலமாக உருவாகி வந்தது. இலங்கை, புத்த சமயம் சார்ந்த நாடாக நீடித்து வந்தது. புத்த சமயத்தைப் பின்பற்றிய வணிகர்களின் தொடர்பால் நாகரி எழுத்தும் ஆய்மன்னர்களால் பயன்படுத்தப்பட்டது.37 ஸ்ரீமூல வாசம் புத்தப் பள்ளிக்குரிய செப்பேட்டின் சமஸ்கிருதப்பகுதி, நாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது இதற்குச் சான்றாகும்.
இவ்வாறு தொண்டைமண்டலத் திரையர் முதலிய வேளாளர்கள் தொடர்பாலும், பாஞ்சாத்ர வைணவத் தொடர்பாலும், புத்த சமயத் தாக்கத்தாலும் ஆய்வேளிர்கள் வேளாளர்குலப் பெண்டிரைத் திருமணம் செய்யும் வழக்கம் உருவாகியிருக்கலாம். இது, கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் புதிய போக்கு ஒன்று உருவாகவும், 14 ஆம் நூற்றாண்டில் முற்றி முழுமை பெறவும் காரணமாயிற்று. அது அரச வாரிசுமுறையில் மருமக்கள் தாயம் (அரசியின் சகோதரனின் மகன் ஆட்சிக்கு வருவது.) நடைமுறைக்கு வந்த நிகழ்வேயாகும். ஆய்வேள் மரபுடன் தொடர்பற்ற வேளாண் சாமந்த அரசு உருவாகி, “வேள்நாட்டு அரசு” என்ற பெயரில் அரசாட்சி செலுத்தும் நடைமுறை நிலை பெற்றது.
கி.பி.1380 ஆம் ஆண்டில் வேள்நாட்டுச் சமூக அமைப்பில் பெருங்குழப்பம் ஏற்பட்டது. வேளாளர்கள் கூடி, வெள்ளை நாடர் எனப்பட்ட சாதியினர், காரியஞ் செய்தல், கணக்கெழுதுதல் வேணாட்டுச் சமூக அமைப்புக்குக் காரணப்படுதல், தமிழ்ப் பாகத்தில் பெண் கட்டுதல், பெண்டிரக் கையாள்தல் போன்றவற்றை (முன்புபோல)க் கடைப்பிடித்துவரக் கூடாதென ஆணையிடுகின்றனர்.   இந்த ஆணையை வெள்ளை நாடர் சிலர் தொடர்ந்து மீறிவந்தனர். இப்போக்கு அடுத்த தலைமுறையினரிடையிலும் தொடர்ந்ததால் கி.பி.1406ஆம் ஆண்டில் மீண்டும் வேளாளர்கள் கூடி, தங்கள் ஆணையை மீறி நடந்த “கணக்கு கோளரி அய்யப்பன்”38 உட்பட வெள்ளை நாடர் மூவர்க்குக் கொலைத் தண்டனை வழங்குகின்றனர். அதன் பிறகும் இத்தகைய போக்கு தொடர்ந்தது. அடுத்த தலைமுறையைச் சேர்ந்த வேளாளர்கள் கி.பி. 1452 ஆம் ஆண்டில் கூடி இறுதியாக ஓர் ஆணையை வழங்கி நிறைவேற்றினர். இந்த இறுதி ஆணையைக் கல்லில் பொறித்து வைத்தனர். கொல்லம் ஆண்டு 628 சித்திரை மாதம் 9 ஆம் நாள் (கி.பி. 1452) பொறிக்கப்பட்ட மேற்குறித்த வேளாளர் ஆணைக் கல்வெட்டுகள், திருவிதாங்கோட்டில் (பின்னாளைய வேணாட்டு அரசின் கோநகர்) ஒன்றும், நெல்லை மாவட்டத்திலுள்ள கல்லிடைக் குறிச்சியில் ஒன்றும் உள்ளன. இரண்டு கல்வெட்டுகளும் ஒரே செய்தியைக் குறிப்பிட்டாலும், கல்லிடைக்குறிச்சிக் கல்வெட்டு சற்று விரிவாக உள்ளது; தமிழ் எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது. பாண்டி நாட்டு மக்கள் வாசித்துப் புரிந்து கொள்வதற்கேற்ற வகையில் அக்கல்வெட்டு தமிழில் எழுதப்பட்டதெனப் புரிந்துகொள்ள முடிகிறது. திருவிதாங்கோட்டுக் கல்வெட்டு வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.39
இக்கல்வெட்டுகளிற் குறிப்பிடப்படுகிற காரியஞ்செய்தல், கணக்கெழுதுதல் என்பவை செயலர் பதவி, கணக்கர் பதவிக்குரிய செயல்பாடுகள் ஆகும். காரணப்படுதல் என்பது “காரணப்பாடு” என்ற கூட்டுக் குடும்பத் தலைமைப் பதவிக்குரிய செயல்பாடு ஆகும். காரணப்பாடு அல்லது காரணவன் என்ற பதவிப் பெயர் ஆழ்ந்த பொருளுடையது. உடலின் ஐம்புலன்களைக் கரணங்கள் என்பர்; கரணங்களை இயக்குகிற உயிரே “காரணவன்” ஆகும். “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்பது புறநானூறு (பா.186) வகுக்கும் இலக்கணம். எனவே, மன்னனைக் காரணவன் எனக் குறிப்பிடுவதுண்டு. கி.பி.1175 ஆம் ஆண்டுக்குரிய இரண்டாம் இராஜாதிராஜ சோழனின் திருவாலங்காட்டுக் கல்வெட்டு “மதுரைக்குக் காரணவரான பாரக்ரம பாண்டியர்” எனக் குறிப்பிடுகிறது.40
கி.பி. 15 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வேணாட்டுச் சமூக அமைப்பில் மாவலி வம்சத்தவரான மறக்குல அகம் படியர்களும் வேளாளர் சாதிக் குழுவினரும் இணைந்து கலந்ததோடு, நம்பி திருப்பாத பிராம்மணர்களுடன் மண உறவல்லாத சம்பந்த உறவைத் தொடர்ந்து மேற்கொண்டுவந்தனர்.41 கூட்டுக்குடும்பம் என்பது (தலைப்பாடு என்ற தமிழ்ச் சொற்றொடரின் துளுமொழி உச்சரிப்பான) தரவாடு என வழங்கப்படலாயிற்று.  வேளாளர்களின் கூட்டுக் குடும்பத் தலைவன் ‘தரவாடு காரணவன்” என அழைக்கப்படலாயினான். தற்போதைய நிலையில் வெள்ளை நாடார் சாதியினர் சான்றோர் குலப் பிரிவினராக நீடித்து வருகின்றனர். தங்கள் வரலாற்று அடையாளங்களைப் பெருமளவு இழந்து விட்டாலும், திருவிதாங்கோட்டின் சுற்றுவட்டாரத்தில் “காரணப்பாடு குடும்பத்தவர்” என்ற அடையாளத்தை மட்டும் சான்றோர் சாதியினர் சிலர் காத்து வருகின்றனர். ஆய்வேளிர் குலத்தவரின் ஆண்வழி வாரிசுகள் அவர்களே.
அடிக்குறிப்பு:
1. “முன்கையைச் சந்தனமுரைத்த மூதறிவோர்” – ஆறுநாட்டு வேளாளர்கள் தாமிரப்பட்டய நகல் – குமாரி லீலா, கல்வெட்டு இதழ் 16 – நளவருடம் தை மாதம், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை, சென்னை.
2. “முடிமன்னர் அறுவரெவர் அவர் செங்கட்சோழர் புகழ்ச் சோழர் அருள்மானி இடங்கழியார் நெடுமாறர் சேரர்”;“ குறுநில மன்னர் ஐவர் நரசிங்க முனையர் கூற்றுவனர் கழற்சிங்கர் மெய்ப்பொருள் ஐயடிகள்” – சேக்கிழார் நாயனார் புராணம் பா. 38-39.
3.  Inscriptions of the Pudukkotadi state, no.14. மேற்கோள்: pp.71 -72, The role of feudatories in Pallava history – M.S. Govindasamy, Annamalai University, 1965.
4. “மலையமாதவன் துவராபதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண் குடிவேளிருள்ளிட்டாரையும்… கொண்டு போந்து…” “மலையமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருள், கொணர்ந்த பதினெண் வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும்  வேந்தன் தொழில் உரித்தென்கிறது” – நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய உரை. இது குறித்த விவாதத்திற்குப் பார்க்க: “”Velir- were they the Velalar?” – article by Nellai Nedumaran and S.Ramachandran, in the Journal of the Epigraphical Society of India – vol XXIV Mysore, 1999.
5. பா.1611 அபிதான சிந்தாமணி, ஆ. சிங்காரவேலு முதலியார், Asian Educational Services, Chennai.
6. Historical Sketches of Ancient Deccan – K.V. Subrahmanya Aiyer, Vol.II p.30, 1967. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் நீர்ப்பழனியில் இம்மன்னனின் பட்டப் பெயருடன் கூடிய கல்வெட்டு உள்ளது. (I. P. S – no.30)
7. “கொங்குதேச ராசாக்கள்” – மேற்கோள்: ப.28, பிற்காலச்சோழர் வரலாறு, தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1974.
8. திருநெய்த்தானம் கல்வெட்டு, S.I.I. vol III, no.89; p.115, Colas – K.A.N. Sastry, Madras University.
9. வரி. 12இ I.P. S. no.14, (Published by the Commissioner of Museums, Govt. Museum, Chennai – 600008, 2002.)
10. வீரகேரள வீர நாராயணனின் பழனிக் கல்வெட்டு – A.R.E. 714 / 1905. ‘‘மூலபலம்” என்பது அரசகுலப்படையைக் குறிக்கும் என்பது கம்பராமாயணம், யுத்தகாண்டம், மூலபலவதைப் படலம், (பா. 4 – 12) பாக்களால் விளங்கும்.
11. தஞ்சை இராஜராஜேஸ்வரம் கோயிற் கல்வெட்டு – S.I.I Vol.II, no.66.
12. S. I. I Vol V, no.723. ‘‘உடையார்” என்பது அரசனைக் குறிக்கும்.
13. பக். 224 – 227 – கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள், செ. இராசு, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1991. (பேரறமுடையார் என்பது ‘‘போர்முடயார்” என வாசிக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.)
14. பக். 103, 132 – ‘‘வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்” – சீ. இராமச்சந்திரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை – 600 113 – 2004.  கி.பி. 1076ஆம் ஆண்டில் (முதற்குலோத்துங்கன் சுங்கந்தவிர்த்ததன் விளைவாக?) ஐந்நூற்றுவர் பணிபுரியத் தொடங்கியமை, கி.பி. 1257 ஆம் ஆண்டில் எழுநூற்றுவர் மெய்க்கீர்த்தி கல்வெட்டில் பொறிக்கப்பட்டமை ஆகிய நிகழ்வுகள் மேற்குறித்த எனது நூலிலும் (ப.137) ‘‘முதற்குலோத்துங்கசோழன் சுங்கம் தவிர்த்தது ஏன்?” என்ற எனது கட்டுரையிலும் (‘‘கல்வெட்டு” காலாண்டிதழ் 75 – தொல்லியல்துறை, சென்னை – 600008- அக்டோபர் 2009.) விவாதிக்கப்பட்டுள்ளன.
15. p. 325, Colas, K.A.N. Sastry.
16. இப்போக்கு குறித்து எனது ‘‘வலங்கைமாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்” என்ற நூலில் (ப.64) விவாதித்துள்ளேன்.
17. இரண்டாம் இராஜாதிராஜ சோழனின் (கி.பி.1163 – 1178) பட்டத்தரசி, உலகுடை முக்கோக்கிழானடிகள், யாதவ மரபினள் எனக் ‘‘கடல் சூழ்ந்த பாரேழும்” எனத் தொடங்கும் மெய்க் கீர்த்தியில் கூறப்பட்டள்ளது. இது ஹொய்சளர் பற்றிய குறிப்பே எனத் தோன்றுகிறது. 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சி செய்த ஹொய்சள வீர வல்லாளனின் பட்டத்தரசி, சோழ இளவரசியாவாள்.
18. இரண்டாம் இராஜாதிராஜனின் ஆச்சாள்புரம் கல்வெட்டு – A.R.E 97-98 / 1919.
19. ‘‘உத்தரமேருச் சதுர்வேதி மங்கலத்து மகாசபையார் வ்யவஸ்தை… ராஜத்வாரத்தேனும் தர்மாஸனத்து என்றல் வாயில்லென்றல் மற்றுத்தானும் நம்மூரில் பிராஹ்மணரென்றல் சிவப்பிராஹ்மணடிகளென்றல் கணக்கரென்றல் வியாபாரிகளென்றல் வெள்ளாளரென்றல் மற்றும் எப்பேர்ப்பட்ட ஜாதிகள்ளென்றும் அவ்வஜாதிகள் பட்ட தண்டம் அவ்வவரே போக்கறுப்பாராகவும்”  – Epigraphia Indica vol XXII no.32.
20. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறுவட்டம், மாமண்டூர் நரசமங்கலம் கல்வெட்டு, வாளுவரும் கணக்கந்தைகளும் தங்கள் ஊர்க்காணிகளைப் பட்டர்களுக்கு விற்ற செய்தியைக் குறிப்பிடுகிறது. பார்க்க: ப.44, வரலாறு, இதழ் 3, இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திரச்சிராப்பள்ளி – 600017- ஆகஸ்ட் 1994. இது குறித்த விவாதத்திற்குப் பார்க்க: ப.35, வலங்கைமாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்.
21. இலங்கையிலுள்ள பிராமிக் கல்வெட்டுகளிலும் பொறிப்புகளிலும் வேள், காமணி(‘‘கிராமணி” என்பதன் பிராகிருத வடிவம்), கஹபதி, ராஜா ஆகிய பட்டங்கள் குடித்தலைவர்களையும் அதிகாரிகளையும் குறிக்கப்பயன்படுத்தப்பட்டன என அர.பூங்குன்றன் எடுத்துக்காட்டியுள்ளார். (Vel in Sri Lanka Brahmi inscriptions” – R. Poongundran, in “”KAVERI” prof. Y. Subbarayalu felicitation volume, Editor, S. Rajagopal, Panpaattu Veliyeettakam, Chennai 2001.) கஹபதி என்பதே காவிதி எனத் தமிழில் வழங்கியுள்ளது என்பது, முன்னரே இக்கட்டுரைத் தொடரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
22. ப.427, கொங்குநாடு (கி.பி.1400 வரை) – வீ.மாணிக்கம் மக்கள் வெளியீடு, சென்னை – 600002 – டிசம்பர் 2001.
23. கல்வெட்டு எண் 29, 32, 95 கொங்குவேளாளர் கல்வெட்டும் காணிப்பாடலும் – செ.இராசு, கொங்கு ஆய்வு மையம்,  ஈரோடு – 11, 2007.
24. தருமபுரி கல்வெட்டுகள், தொகுதி 1 – தொடர் எண் 1974/62, பதிப்பாசிரியர்: இரா.நாகசாமி, தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை – 600028, 1978.
25. ப. 225, கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்கள். கி.பி.10 ஆம் நூற்றாண்டுக்குரிய திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணபுரம் கல்வெட்டில், ‘‘இவ்வூர் ஈழச்சான்றான் முன்னூற்றுவப் பெருமானாகிய சோழவேள் ஏனாதி” என்பவன் குறிப்பிடப்படுகிறான். (S.I.I Vol XIII no.65)
26. வேள்விக் குடிச் செப்பேடு வரி 83 – 84; வரி 126 – 131 (பக். 26- 31. ‘‘பாண்டியன் செப்பேடுகள் பத்து”)
27. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், நெக்கோணம் கல்வெட்டு, (கி.பி. 1483) வரி 7 (I.P.S no. 672)
28. திருவரஞ்சுரம் கல்வெட்டு, கி.பி. 1227 (A.R.E 184/1940-41) மேற்கோள்: Social change and valangai and idangai divisions, Y.Subbarayalu in “”KAVERI”
29. ஆயர்குலத்தவரின் மெய்க்கீர்த்தி, ‘‘மாயனை வளர்த்தவர்கள்” என்றுதான் பெருமிதம் கொள்கிறது. கண்ணன் பிறந்த யது குலத்துக்கு உரிமை கொண்டாடவில்லை. (திருவாவடுதுறையிடத்திலுள்ள அறந்தாங்கித் தொண்டைமான் ஆட்சிக் காலச்செப்பேடு – கி.பி.16 ஆம் நூற்றாண்டு – திரு.ச. கிருஷ்ணமூர்த்தி அவர்களால் வாசித்துப் பதிப்பிக்கப்பட்டது. ப.51, ‘‘வரலாறு” ஆய்விதழ் 7 பிப்ருவரி ஆகஸ்டு 1997 இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய வெளியீடு, திருச்சிராப்பள்ளி – 17.
30. பார்த்திவசேகரபுரம் செப்பேடு, ஏடு 5, வரி 11 (p 29, T.A.S Vol I)
31. ஸ்ரீமூலவாசத்துச் செப்பேடு அல்லது பாளையத்துச் செப்பேடு, சமஸ்கிருத சுலோகம் 4 – 6 (p 277, T.AS. Vol I)
32. பார்த்திவசேகரபுரம் செப்பேடு, ஏடு 5, வரி 8 – 13 (T.A.S Vol I, p.29)
33. திருநந்திக்கரைச் செப்பேடு அல்லது ஹுசூர் அலுவலகச் செப்பேடு, வரி 1 – 2 (T.A.S Vol I, p.42)
34. பார்த்திவசேகரபுரம் செப்பேடு, ஏடு 2இ வரி 5 (T.A.S Vol I, p.20) ‘‘விழாப்புறமாக ஏழுநாள் திருவிழாச் செய்து பங்குனி வியாகம் ஆறாடுவதாகவும்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. பூர்ணி மாந்தக் கணக்கீட்டின்படி மாசி மாத இறுதி நாளான மக நட்சத்திர நாளன்று திருவிழா தொடங்கப்பெற்றால் தான் பங்குனி மாத விசாக நட்சத்திர நாள் ஏழாவது நாளாக அமையும்.
35. திருப்பறப்புச் செப்பேடு, இறுதி ஏடு, வரி 8 – 9  (T.A.S. Vol I, p 295)
36. பார்த்திவசேகரபுரம் செப்பேடு, ஏடு 5, வரி 12-13 (T.A.S. Vol I, p.29) மகேந்திர பல்லவனின் ‘‘மத்தவிலாசப் பிரகசனம்” 1917 ஆம் ஆண்டளவில் திருவனந்தபுரம் பகுதியில் கண்டறியப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டது என்பது கவனத்துக்குரியது.
37. நாகரி என்ற பெயரே வணிகர்களின் அமைப்பான ‘‘நகரம்” என்ற சொல்லுடன் தொடர்புடையது. பாடலிபுத்ரத்தின் (பாட்னா) பழம்பெயர்கள் பாட்னா, நகரம் ஆகியன என்றும் புத்தசமயம் சார்ந்த பட்டினத்தார் அல்லது நகரத்தார்களால் பாடலிபுத்ரத்தில் உருவாக்கப்பட்ட எழுத்தே நாகரி எனப் பெயர் பெற்றது என்றும் ஒரு கருத்து உண்டு.
38. கோளரி அய்யப்பன் பெயருக்கு முன்னொட்டாக அமைந்துள்ள ‘‘கணக்கு” என்பது காவிதி – கணக்கந்தைகளின் சாதிப்பட்டம் எனக் கொள்ளலாம்.
39. T.A.S Vol V, no.26. இக்கல்வெட்டு, திரு.தியாக சத்தியமூர்த்தி அவர்களின் முன் முயற்சியால் பத்மநாபபுரம் அரண்மனைக் காட்சிக் கூடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கல்லிடைக் குறிச்சிக் கல்வெட்டு பற்றிய பதிவு, 1916 ஆம் ஆண்டுக்குரிய கல்வெட்டு ஆண்டறிக்கையில் இடம் பெற்றுள்ளது. கல்வெட்டின் வாசகங்கள், திரு.ச. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ‘‘கல்லிடைக் குறிச்சிக் கலைக்கோயில்கள்” நூலில் பக்.188-19 இல் வெளியிடப்பட்டுள்ளன. (பதிப்பு: ஆ. உண்ணாமலை, சிதம்பரம் 608001 – 1996.)
40. Epigraphia Indica Vol XXII, no.14. கஹபதி (காவிதி) என்ற சொல்லும், எல்லாச் சாதிகளுக்கும் பொதுவான தந்தையை – குடும்பத்தலைவனையே குறித்தது என்றும், அவ்வகையில் Pater Families எனப்பட்ட ரோமானியக் குடும்பத்தலைவர் பதவிக்குச் சமமானதென்றும் டி.டி. கோசாம்பி எழுதியுள்ளார். (ப.178, பண்டைய இந்தியா, அதன் பண்பாடும் நாகரிகமும் பற்றிய வரலாறு – தமிழாக்கம்:  எஸ்.ஆர்.என். சத்யா, பதிப்பு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1989.) ‘‘வெள்ளை நாடார்” என்ற வழக்கு கூட, அனைத்து வர்ணங்களுக்கும் – நிறங்களுக்கும் – அடிப்படையான வர்ணமான வெள்ளையாக உருவகித்துக் கூறப்பட்ட வழக்கோ என்ற ஐயம் தோன்றுகிறது.
41. கேரளத்தில் மருமக்கள்தாய ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது, சோழப் பேரரசின் ஆதிக்க விரிவாக்க முனைப்பின் எதிர்விளைவாக இருக்கவேண்டும். இது 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கியிருக்கலாம்.

2 comments:

  1. தங்களின் ஆராய்ச்சி முற்றிலும் புது கோணத்தில் உள்ளது, எனக்கு உங்கள் கருத்துக்கள் உடன்பாடிருந்தாலும் சிலவற்றை ஆராயவேண்டுகிறேன். Timeline ல் உள்ள ஆதிசோழர் பட்டியல்பற்றித் தங்கள் கருத்து என்ன?என் அனுமானம் சோழர் என்றழைக்கப்பட்டவர் விந்திய மலைக்குத்தெற்கே மைசூர் வரை பரவியிருக்கலாம் . சேரர் மேற்குக்கடற்கரை ஓரமும் பாணடியர் கொல்லம் முதல் மேற்கு இலங்கை வரை இருந்திருக்கலாம். மேலும் இலங்கை பௌத்தரகளைப் பொறுத்தமட்டில் தேவர்களும்/நாகர்/யக்ஷர்/ராக்ஷஸர் இருக்கும் இடம். அதாவது நாகரிகம்முதிர்ச்சி உற்ற நிலை. சிங்கள இளவரசி குமேனியின் கதை மதுரை மீனாட்சி அம்மன் கதைை ஒத்திருக்கிறது. மேலும் சோழர்களுக்கும் வேளிருக்கும் உள்ள தொடர்பு பாண்டியர்களை புதுக்கோட்டைக்குத்தெற்கே நிறுத்திவிட்டது. வேள் என்ற சொல் சிங்கள/பிராகிருத/வடமொழி கல்வெடடுகளில் ஏன் அப்படியே கையாளப்பட்டிருக்கிறது?
    மன்னர்களால் கையாளப்படவில்லை?காஸ்மீரத்திற்கும் துளு வழியாகத் தமிழுக்குத்தொடர்பிருந்ததா?ஏனென்றால் அலெக்ஸாண்டரால் புகழப்படட குலினர்கள் நாக மற்றும் சகதி உபாசகர்கள் குல் என்பது நாகம் மற்றும் குடும்பப்பெயர். குல் அவ்வா கொற்றவை கொல்லிப்பாவை கொல்லூர் எல்லாம் காஸ்மீரத்தைக்காட்டுகின்றன. பழையாறை ஆதிபுரி ஆதிஸதானானதற்போதைய ஸ்ரீநகர். காஸ்மீர் மக்கள் வெள்ளை என்று மெகஸ்தனீஸ் குறிப்பிடுகிறார் . வேளிர் கஸ்மீரத்தவரா?இரண்டாம் ராஜேந்திரனுக்குப்பிறகு கொடும்பாளூர் வேளிர் ஹொய்சளர்களுடன் சங்கமித்துவிட்டனரா?மஹேந்திரவர்மன் காலத்தில் தமிழுக்கு மாறியமர்மம் என்ன?ஏன் குமரிலபட்டர் தனது வார்த்திகாவில் சோர/சோடவிமர்ஸனம் செய்து காத்யாயனர் குறுப்பிட்டதைத்தவிர்த்தார். துருக்கி மொழியி்ல் சோல என்பதற்குப்பாலை என்று பொருள் குமரில பட்டர் பாலையையும் சோரர் கள்வரையும் ஏன்குழப்பினார். வடமழி மற்றும் அல்பெரூனி சோழர்களைத்தவிர்த்து ஏன்?ARE CHOLÄS MYSTERIOUS PEOPLE AND WHY DID THEY SUPPORT TAMIL AND WHY D AIHOLE MERCHANT GUILD SUPPORT CHOLAS AND AMIL?

    ReplyDelete