Thursday, August 18, 2011

சங்க காலமும் , தமிழக வரலாறும்


சங்க காலம்

தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இதனால் இக்காலத்தை மாறுதல் நிகழும் காலம் என்பர். உணவு தேடி வாழும் இனக்குழு வாழ்க்கை, கால்நடை வளர்ப்பினை மையமாகக் கொண்ட மேய்ச்சல் நில வாழ்க்கை, உணவு உற்பத்தி செய்யும் ஒரு விதமான நிலவுடைமைச் சமுதாய வாழ்க்கை என மூன்று வகையான சமூக அமைப்புகள் வௌ;வேறு நிலப்பகுதிகளில் ஒரே நேரத்தில் நிலவின.
இதனடிப்படையில் வௌ;வேறு வகையான பொருளாதார நடவடிக்கைகளும் சமூக அமைப்புகளும் கொண்ட ஓர் அசமத்துவ வளர்ச்சி )சங்ககாலத்தில் நிலவியது.
நிலப் பாகுபாடு

மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை, ஆறும் ஆறு பாயும் சமவெளிப் பகுதிகளும் மருதம், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என அழைக்கப்பட்டன. குறிஞ்சியும் முல்லையும் கோடையின் வெம்மையால் தம் நிலையிலிருந்து மாறுபட்டு நிற்கும். இது தற்காலிகமான ஒன்று. இந்நிலப்பகுதி பாலை எனப்பட்டது.
மக்களும் பண்பாடும்

குறிஞ்சி நில மக்கள் சிலம்பன், குறவன், வெற்பன், வேட்டுவர், கானவர், குன்றவர் என அழைக்கப்பட்டனர். தொடக்கத்தில் வில், அம்பு, வேல் ஆகியவற்றின் துணையுடன் வேட்டையாடி வாழ்ந்தனர். மூங்கிலரிசி, திணை, மலை நெல், தேன், கிழங்குகள் ஆகியனவும் உணவாகப் பயன்பட்டன. உணவு தேடி வாழும் வாழ்க்கை இங்கு நிலவியது. பின், புன்புல வேளாண்மை உருவாகியது.
சேயோனாகிய முருகன் இவர்களுடைய கடவுளாக இருந்தான். பறை, தொண்டகப்பறை, குறிஞ்சியாழ் ஆகியன இங்கு வழங்கிய இசைக் கருவிகள். வள்ளிக்கூத்து குறிஞ்சி நிலத்துக்குரிய ஆட்டக் கலையாகும்.
ஆடுமாடுகளை மேய்க்கும் மேய்ச்ச்சல் நில வாழ்க்கையை மையமாகக் கொண்டது முல்லை நிலம். வரகு, சாமை, கேழ்வரகு, கடலை, அவரை, துவரை ஆகியன மழையை நம்பி மேற்கொண்ட வேளாண்மையில் கிட்டின. மாயோனாகிய திருமால் முல்லை நிலத்தின் கடவுள். ஏறுகோட்பறை, குழல், முல்லையாழ் ஆகியன இந்நிலத்துக்குரிய இசைக் கருவிகள்.
உணவு தேடும் வாழ்க்கையைக் கடந்து உணவு உற்பத்தி செய்யும் நிலையும் நிரைகளை சொத்துக்களாக கொள்ளும் நிலையும் இங்கு உருவாகின.
மலையிலும் காட்டிலும் அலைந்து திரிந்த நிலையிலிருந்து வளர்ச்சி பெற்று ஆற்றங்கரையில் நிலையாக வாழத் தொடங்கிய இடம் மருத நிலமாகும். இங்கு உழு தொழிலின் மூலம் உணவு உற்பத்தி நிகழ்ந்தது. ஆற்று நீரை நேரடியாகவும் நீர்நிலைகளில் தேக்கி வைத்தும் பயன்படுத்தினர்.
செந்நெல், வெண்நெல், கரும்பு, மஞ்சள் (பிற்காலத்தில் வாழை) ஆகியன முக்கிய உற்பத்திப் பொருளாயின. கரும்பிலிருந்து வெல்லம் தயாரிக்கும் கரும்பாலைகளும், உபரி நெல்லை மூலதனமாகக் கொண்டு பண்டமாற்று வாணிபத்தை மேற்கொண்ட வாணிப குழுக்களும் உருவாயின. சிற்×ர்கள் பேரூர்களாக வளர்ச்சி பெறத் தொடங்கின. நெல்லரிப் பறையும், மருதயாழும் இந்நிலத்தின் இசைக் கருவிகளாகயிருந்தன. தச்சர், கொல்லர், குயவர் ஆகிய கைவினைர்களின் தோற்றமும் இங்குதான் உருவாகியது.
நெய்தல் நிலப்பகுதியில் மீன்பிடித்தலும், உப்பு உற்பத்தி, உலர்மீன் உற்பத்தி செய்தலும், இவற்றை பிற நிலப்பகுதிகளுக்குக் கொண்டு சென்று பண்டமாற்று செய்தலும் முக்கிய தொழில்கள். இதன் வளர்ச்சி நிலையாகக் கடல் வாணிபம் உருவாகியது. நெய்தல் குடியிருப்புகள் பட்டினம், பாக்கம் என்றழைக்கப்பட்டன. வருணன் (வண்ணன்) இந்நிலத்தின் தெய்வம். நாவாய்பறையும், நெய்தல் யாழும் இசைக் கருவிகள்.
வளமற்ற நிலப்பகுதியான பாலையில் வழிப்பறியும் கொள்ளையும் மக்களின் துணைத் தொழில்களாயின. இங்கு வாழ்ந்த மறவர்களின் குடியிருப்பு, கொல் குறும்பு எனப்பட்டது. கொற்றவை, இந்நிலத்தின் தெய்வம். நிறைகோட்பறை, சூறைகோட்பறை, வாகையாழ் ஆகியன இந்நிலத்தின் இசைக் கருவிகள்.
சங்ககால அரசியல்

சங்ககாலத் தமிழகம் மன்னராட்சியின் கீழ் செயல்பட்டது. ஆட்சி புரிவோர் குறுநில மன்னர்கள். வேந்தர் என இரண்டு வகையாக அழைக்கப்பட்டனர். குறிஞ்சி முல்லை நெய்தல் பாலை ஆகிய நான்கு நிலப் பகுதிகளிலும் வாழ்ந்த குறவர், ஆயர், பரவர், மறவர் ஆகிய மக்கட் பிரிவினர் தத்தமக்கென சுயேச்சையான ஆளுவோரைக் கொண்டிருந்தனர். இவர்களையே குறுநில மன்னர்கள் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடும். குறுநில மன்னர்களுக்கும் அவர்களால் ஆளப்படும் மக்களுக்குமிடையே ஆழமான வேறுபாடுகள் நிலவவில்லை.
மருதநில அல்லது நெய்தல் நில நகர் ஒன்றினை மையமாகக் கொண்டு பரந்த நிலப்பகுதியை ஆட்சிபுரிந்தவர்கள் வேந்தர் எனப்பட்டனர். சேரர், சோழர், பாண்டியர் என மூன்று வேந்தர்கள் மட்டுமே பெருநிலப் பகுதியை ண்டனர். வாய்ப்பு நேரிடும் போது குறுநில மன்னர்களின் நிலப் பகுதியையும் தங்களுடன் இணைத்துக் கொண்டனர்.
மூவேந்தர்களுக்கு துணை புரிய 1. அமைச்சர், 2. புரோகிதர், 3. சேனாதிபதி, 4. தூதர், 5. ஒற்றர் என்போரைக் கொண்ட ஐம்பெருங் குழுவும், 1. கரணத் தலைவர், 2. கருமகாரர், 3. கனகச்சுற்றம், 4. கடைகாப்பாளர், 5. நகரமாந்தர், 6. படைத் தலைவர், 7. யானை வீரர், 8. இவுளிமறவர் என்போரைக் கொண்ட எண்பேராயம் என்ற அமைப்பும் இருந்தன. ஆயினும் இவ்விரு அமைப்புகளும் மன்னனைக் கட்டுப்படுத்தும் தன்மையன அல்ல. குறுநில மன்னர்கள் ஆண்ட பகுதிகளில் பொதியில் மன்றம் என்ற அமைப்புகள் செயல்பட்டன.
சமயம்

ஆவிகளின் மீது நம்பிக்கை கொண்ட ஆவி உலகக் கோட்பாடும் குலக்குறி’ வழிபாடும் மூத்தோர் வீரர்வழிபாடும் சங்ககாலச் சமயத்தில் செல்வாக்கு செலுத்தின. போரில் இறந்துபட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டி வழிபடும் நடுகல் வழிபாடு பரவலாக இருந்தது. கடிமரம், காவல்மரம் என்ற பெயரில் குறிப்பிட்ட மரங்கள் புனித மரங்களாகக் கருதப்பட்டன.
பாம்பு வழிபாடும் வழக்கிலிருந்தது. திருமால், முருகன், கொற்றவை ஆகியன சங்ககாலத்தில் முக்கிய தெய்வங்களாக விளங்கின. இன்று பரவலாக உள்ள பிள்ளையார் வழிபாடு சங்ககாலத்தில் இல்லை. சிவனைப் பற்றிய குறிப்புகள் சங்க நூல்களில் இடம் பெற்றாலும் மேற்கூறிய தெய்வங்களைப் போல் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை. வாலியோன் என்ற பெயரில் பலராமர் வழிபாடு இருந்துள்ளது. சமணம், பௌத்தம் ஆகிய வடபுல சமயங்கள் இங்கு பரவின. வடமொழித் தாக்கத்தின் விளைவாக வேள்விகள் நிகழ்ந்தன.
சங்ககால கவிஆர்கள் சிலர் இவ்விரு சமயங்களையும் தழுவியிருந்தனர். இவ்வுலக வாழ்க்கையை வெறுத்தொதுக்கும் நிலையாமைக் கோட்பாடு செல்வாக்குப் பெறவில்லை. வாழ்க்கை உவப்புக் கொள்கையே மேலோங்கியிருந்தது.
பொருளியல்

நாட்டில் அடிப்படைத் தொழிலாக வேளாண்மை அமைந்தது. மருதநிலப் பகுதியில் நெல்லும், கரும்பும் பயிர் செய்யப்பட்டன. எள், கொள், துவரை ஆகியன குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளில் பயிர் ஆயின. சாமை, வரகு, திணை ஆகியன முக்கிய புன்செய் நிலப் பயிர்களாகும். தேனெடுத்தல், கிழங்குகளை அகழ்ந்தெடுத்தல், மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் ஆகியன ஏனைய பொருளாதார நடவடிக்கைகளாகும்.
நெசவு, கொல்வேலை, தச்சு வேலை, கருப்பஞ் சாற்றிலிருந்து வெல்லம் எடுத்தல், சங்கறுத்தல், கூடை முடைதல் ஆகியன முக்கிய கைத்தொழில்களாக அமைந்தன. பண்டமாற்று முறையில் வாணிகம் நிகழ்ந்தது. பெரிய நகரங்களில் அங்காடி என்ற பெயரில் சந்தைகள் இருந்தன. பகற்பொழுதில் செயல்படுபவை நாளங்காடி என்றும், இரவு நேரத்தில் செயல்படுபவை அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன.
கடைத்தெரு நியமம் என்று அழைக்கப்பட்டது. பொருட்களைக் கொண்டு செல்ல எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகள் பயன்படடன. வணிகர்கள் சாத்து என்ற பெயரில் குழுக்களாகச் செயல்பட்டனர். மிளகு, அரிசி, இஞ்சி, ஏலம், மஞ்சள், இலவங்கம் ஆகிய உணவுப் பொருட்களும் சந்தனம், அகில் ஆகிய மணப் பொருட்களும் தமிழகத்திலிருந்து அரேபியா, எகிப்து, உரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
குரங்கு, மயில், யானைத்தந்தம், முத்து ஆகியனவும் ஏற்றுமதியாயின. கடல் வாணிகத்திற்குப் பாய்கள் கட்டப்பட்ட மரக்கலங்கள் பயன்பட்டன.
 
இலக்கணம்

தமிழ் மொழி தொன்மையான நூலாக இன்று நம் பார்வைக்குக் கிட்டுவது தொல்காப்பியமாகும். தனக்கு முன்னால் வாழ்ந்த நூலாசிரியர்களின் நூல்களை கற்றுத் தேர்ந்து தொல்காப்பியர் இந்நூலை உருவாக்கியுள்ளார்.
எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பிரிவுகளாக இந்நூல் அமைந்துள்ளது. பொதுவாக மொழிகளின் இலக்கணம் என்பது எழுத்து, சொல் யாப்பு சார்ந்ததாக மட்டுமே இருக்கும். ஆனால் தொல்காப்பியம் இவை மூன்றுடன் மட்டுமின்றி மனித வாழ்க்கையின் இலக்கணத்தை உணர்த்தும் வகையில் பொருளதிகாரம் என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளது.
 
இலக்கியம்

தமிழ் இலக்கியத்தின் பொற்காலமாக சங்ககாலம் அமைந்தது. இக்காலத்தில் தோன்றிய பெரும்பான்மைப் பாடல்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற பெயரில் பிற்காலத்தில் தொகுப்பு நூல்களாகத் தொகுக்கப்பட்டன. 1. நற்றிணை, 2. குறுந்தொகை, 3. ஐங்குறுநூறு, 4. பதிற்றுப்பத்து, 5. பரிபாடல், 6. கலித்தொகை, 7. அகநானூறு, 8. புறநானூறு என்ற எட்டு நூல்களும் எட்டுத்தொகை என்ற தொகுப்பில் அடங்குகின்றன.
இந்நூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பல்வேறு கவிஆர்களால் பல்வேறு கால கட்டங்களில் பாடப்பட்டவை. 1. திருமுருகாற்றுப்படை, 2. பொருநராற்றுப்படை, 3. சிறுபாணாற்றுப்படை, 4. பெரும்பாணாற்றுப்படை, 5. முல்லைப்பாட்டு, 6. மதுரைக் காஞ்சி, 7. நெடுநல் வாடை, 8. குறிஞ்சிப் பாட்டு, 9. பட்டினப்பாலை, 10. மலைபடுகடாம் என்ற பத்து நூல்களும் பத்துப்பாட்டு எனப் பெயர் பெற்றன.
இவற்றுள் திருமுருகாற்றுப்படையும், நெடுநல்வாடையும் நக்கீரராலும், எஞ்சிய எட்டு நூல்களும் எட்டு கவிஆர்களாலும் இயற்றப்பட்டன. இவ்விலக்கியங்களின் தனிச்சிறப்பு இவை அகம் புறம் என்ற பொருள் பாகுபாடுகளைக் கொண்டிருப்பதாகும். மனிதர்களின் அகம் (மனம்) சார்ந்த காதல் தொடர்பான செய்திகளைக் கூறுவது அகத்திணை ஆகும்.
இதற்குப் புறத்தேயுள்ள கல்வி, வீரம், கொடை, நீதி அறமல்லன போன்றவற்றைக் குறிப்பது புறத்திணையாகும். அகநூல்களில் இடம்பெறும் காதலர்களை, இயற்பெயர் சுட்டிக் குறிப்பிடக் கூடாது, என்ற தொல்காப்பியர் விதியை சங்ககாலக் கவிஆர்கள் உறுதியாகக் கடைபிடித்தனர்.
சங்ககாலத்தை அடுத்து வரும் காலம் சங்கம் மருவிய காலம் எனப்படும். இக்காலத்தில் உருவான பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு எனப்படுகின்றன.
இவற்றுள் திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை ஐம்பது, கார் நாற்பது, கைந்நிலை என்ற ஆறு நூல்களும் சங்ககால அகத்திணைமரபு சார்ந்தவை. எஞ்சிய நூல்களில் திருக்குறள் தவிர்ந்த, நாலடியார், பழமொழி, ஏலாதி, திரிகடுகம், நான்மணிக்கடிகை, ஆசாரக் கோவை, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி என்ற பதினொறு நூல்களும் புறத்திணை சார்ந்தவை. குறள் அகமும், புறமும் சார்ந்த நூலாகும்.
பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் தலையான இடத்தைப் பெறுவது திருக்குறள். 1330 குறள் வெண்பாக்களைக் கொண்ட இந்நூல் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. எச்சமயத்தையும் சாராது வாழ்வியல் நெறிகளைக் கூறுவது இதன் தனிச் சிறப்பாகும். சங்க காலத்தில் வாழ்வியலின் பகுதியாகக் கருதப்பட்ட கள்ளுண்டல், பரத்தையற் பிரிவு, புலால் உண்ணுதல்,சூதாடல் ஆகியன வள்ளுவரால் கடிந்தொதுக்கப்படுகின்றன.
திருக்குறளுக்கு அடுத்த இடத்தைப் பெறும் நாலடியார் சமண முனிவர்கள் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பாகும். இந்நூல் குறளுக்கு மாறாக உலகியல் வாழ்க்கை மீது வெறுப்பை வெளிப்படுத்தி துறவறத்தை வற்புறுத்துகிறது. இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற இரு நூல்களும் வைதீக சமயச் சார்பானவை. ஒழுக்கங்களின் தொகுதி என்ற பொருளைத் தரும் ஆசாரக் கோவை என்ற நூல் வடமொழி நீதிநூல்கள் சிலவற்றின் சாரமாக அமைகின்றது.
பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகியன சமணம் சார்ந்து நீதி கூறுகின்றன.
 
 
தமிழக வரலாறு
தமிழ்நாடு ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் (origin) தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருத்த திராவிடர், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்பு படுத்தப் படுகின்றது. இக் கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.
இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய திராவிட நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள், பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர்.
பாண்டியர்களுடைய காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகின்றது. மதுரை முதற் பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. இவர்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப் பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் பலம் மிக்க அரச வம்சங்களில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.

1. கி.பி 1 முதல் 4 ஆம் நூற்றாண்டு வரை

முற்காலச் சோழர் கி.பி முதலாம் நூற்றாண்டு தொடக்கம் நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் மிகப் புகழ் பெற்றவனாக கரிகால் சோழன் விளங்கினான். தற்காலத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய இவர்கள், யுத்த நடவடிக்கைகளில் சிறந்து விளங்கினர்..

2. கி.பி 4 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை

கி.பி நான்காம் நூற்றாண்டின் பிற்பாதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகின்றது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். திராவிடக் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராஜிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது. இக்காலகட்ட பகுதியில் (கி.பி. 300- கி.பி. 600) பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

3. கி.பி 9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராஜராஜ சோழன் மற்றும் அவனது மகனான இராஜேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஒரு பலம் மிக்க சக்தியாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மத்திய இந்தியா, ஒரிஸ்ஸா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது. இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, ஜாவா, மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.

4. 14 ஆம் நூற்றாண்டு

14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316ல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்ஜி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இஸ்லாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் பலவீனப்படுத்தி இஸ்லாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இஸ்லாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விஜயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர். ஹம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விஜய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.
ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விஜயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டது. நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு அமைதியுடனும் செழிப்புடனும் விளங்கியது.தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களை புதுப்பிக்கவும் செய்தனர்.
இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.

5. 17 ஆம் நூற்றாண்டு

1639 இல் ஆங்கிலேயர்கள் மதராஸில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு , அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தை தம் வசப்படுத்திய இந்த காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். வீர பாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர், பூலித்தேவன் ஆகியோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

6. 20 ஆம் நூற்றாண்டு

1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராஸ் மாகாணம் மதராஸ் மாநிலம் ஆனது. தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராஸ் மாநிலத்தின் கீழ் வந்தது. 1953இல் மதராஸ் மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராஸ் மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராஸ் மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்னாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1968இல், மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

7. பாரம்பரியம்

தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது இந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று.
சுப்பிரமணிய பாரதி, வ. உ. சிதம்பரம்பிள்ளை, சி. வி. ராமன், சுப்பிரமணியன் சந்திரசேகர், ஆர். கே. நாராயண், சீனிவாச ராமானுஜன், அப்துல் கலாம் முதலியோர் மாநிலத்தின் பிரபலமானவர்களுள் சிலராவர். இவர்களோடு, கண்ணகி, திருவள்ளுவர், ஒளவையார், கம்பர், இராஜராஜ சோழன் போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாவர். அலன் டூரிங், எனும் கோட்பாட்டுக் கணினியியல் அறிவியலாளரும் இளம் வயதில் மதராஸ் பிரெசிடென்சியில் இருந்தவரே.

8. அரசியல்

தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிகள் தேர்ந்து எடுக்கப் படுகின்றனர்.
தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன.காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, மார்க்சிய கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகியவையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.
ஈ.வெ.ராமசாமி (தந்தை பெரியார் என்று அறியப்படுகிறார்) 1944இல் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து, 1949இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை (தி.மு.க, D.M.K) சி. என். அண்ணாதுரை தோற்றுவித்தார். 1947இல் இந்திய விடுதலைக்குப் பிறகு 1967 வரை தமிழ் நாட்டை காங்கிரஸ் கட்சி ஆண்டது.1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1972இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (A.D.M.K,அ.தி.மு.க) ம. கோ. இராமச்சந்திரன் [M.G.R] தோற்றுவித்தார். 1977இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது.
1967 முதல் 2011இல் கடைசியாக நடந்த சட்ட மன்ற தேர்தல் வரை தி.மு.க அல்லது அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று (அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள்) பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன.தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உண்டு என்றாலும், இது வரை தனிக் கட்சி ஆட்சியே நடை பெறுகிறது. இருப்பினும், தமிழக கட்சிகள் நடுவண் அரசில் கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும் பங்கேற்கவும் செய்கின்றன.
தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு,தாழ்த்தப்பட்டோர் மற்றூம் சிறுபான்மை சமூகத்தின் நலன், இட ஒதுக்கீடு, காவிரி நதி நீர்ப் பங்கீடு பிரச்சினை, விவாசாயிகள், பாமரர் மற்றும் நலிவடைந்த பிரிவினர் நலன், ஊழல் ஆகியவை தமிழ் நாட்டு அரசியலில் முக்கியத்துவம் உள்ளவை.

 By.
            
 
        உங்கள்
வரலாற்றுப் பிரியன்
 
 

No comments:

Post a Comment